கேப்டன் பொறுப்பு, மனைவிகளால் பிரச்சனை
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், துணை கேப்டன் ரோஹித் சர்மாவிற்கும் நிகழ்ந்து வரும் மோதல் போக்கு நாளுக்கு நாள் முற்றிவருகிறது. இதனால் இந்திய அணி நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து கவலையில் ஆழ்ந்துள்ளது. காரணம் உலகக்கோப்பை தொடருக்கு செல்லும் இந்திய அணியில் பிசிசிஐ சில கட்டுப்பாடு களை விதித்தது. முக்கியமாக குடும்ப உறுப்பினர்கள் வீரர்களுடன் செல்ல சிறப்பு விதிகளும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த விதிகளை மற்ற வீரர்கள் ஏற்கும் நிலையிலிருந்தாலும், ரோஹித் சர்மாவிற்கு ஒத்துவராது. ஏனென்றால் ரோஹித் சர்மா மனைவி ரித்திகா கைக்குழந்தையுடன் இருப்பதால் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் குடும்ப விதிகளில் சிறப்பு கோரிக்கை வைத்ததாகவும், ரோஹித்தின் கோரிக்கையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படு கிறது. மேலும் உலகக்கோப்பை தொடரில் ரோஹித்தின் ஆலோசனைகளைக் கோலி கண்டுகொள்ளவில்லையென்றும், இதனால் தான் இந்திய அணி அரையிறுதியுடன் திரும்பியது என்ற தகவல் ஏற்கெனவே அறிந்தது தான்.
புதிய பயிற்சியாளர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களுக்கு ரோஹித்தையும், டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கோலியையும் கேப்டனாக நியமிக்கப் போவதாக பிசிசிஐ மூலம் செய்தி கசிய அடுத்த சில மணிநேரங்களில் இன்ஸ்டாகிராம் மூலம் இருவரின் மனைவிமார்கள் பிரச்சனையை 100 டிகிரி செல்சியஸில் கொதிக்கவிட்டனர்.
உலகக்கோப்பை தொடர் நிறைவுபெற்ற அடுத்த சில நாட்களில் ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராமில் இருந்த விராட் கோலியை அன்ஃபாலோ (UNFOLLOW) செய்தார். வியாழனன்று கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவையும் அன்ஃபாலோ செய்தார் ரோஹித். இதே முறையை ரோஹித்தின் மனைவி ரித்திகாவும் பின்பற்றினார்.
பதிலுக்கு அன்ஃபாலோ கலையை கையிலெடுத்த அனுஷ்கா சர்மா தன் ஸ்டேட்டஸில், ``பொய்யான தோற்றங்களுக்கு மத்தியில் உண்மை அமைதியுடன்தான் செயல்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அனுஷ்கா சர்மாவின் பதிவுக்குப் பிறகு கேப்டன் மற்றும் துணைக் கேப்டன்களின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மோத தொடங்கிவிட்டனர். ஆனால் இந்த விவகாரம் குறித்து கேப்டன் கோலி எதையும் கண்டுகொள்ளாமல் பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் நியமித்துள்ள அதிகார குழுவுக்கு இன்னும் தகவல் சேரவில்லை. சென்ற பின்பு தான் இவர்களின் மோதல் போக்கு எப்பொழுது முடியும் என்று தெரியும். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.