மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா அணி தடுமாறி வருகிறது.
இந்திய - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 224 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து காணப்பட்டது. இந்நிலையில் தொடங்கப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய கேப்டன் கோலி ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதனை தொடர்ந்து தனது பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி, தொடக்கத்திலே தடுமாறியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் அவுட் ஆக 2 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று தொடங்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் போக, 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதில் இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களை எடுத்தார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 335 ரன்கள் பின்தங்கி இருந்தது. இதனை தொடர்ந்து மறுபடியும் பாலோ ஆன் செய்த தென்னாப்பிரிக்கா அணி, பேட்டிங் செய்து வருகிறது. தற்போது வரை தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.