டி-20, டெஸ்ட் என இரண்டு விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கத் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடர் சமனில் (1-1) நிறைவடைந்த நிலையில், 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது. முதல் இரண்டு டெஸ்ட் (விசாகப்பட்டினம், புனே) போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலை யில், கடைசி டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் சனியன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி ரோஹித் சர்மாவின் இரட்டை சதம் (212) மற்றும் ரஹானே (115) சதத்தின் உதவி யால் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியின் மிரட்டலான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறி 162 ரன்களுக்கு சுருண்டு பாலோ-ஆன் பெற்றது.
335 ரன்கள் பின்னிலையுடன் (பாலோ ஆன்) தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி யின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், உமேஷ் - ஷமி வேகக்கூட்டணியின் அதிரடி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 4-வது நாள் ஆட்டம் செவ்வாயன்று தொடங்கியது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலை யில் விரைவாக வெற்றியை ருசிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே தென் ஆப்பிரிக்க அணி மேற்கொண்டு 1 ரன் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டு களை இழந்து தோல்வியைத் தழு வியது. தென் ஆப்பிரிக்க அணி 48 ஓவர் களில் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்து தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட் வாஷ் (3-0 என்ற கணக்கில்) செய்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகள், உமேஷ் யாதவ், நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இரட்டைசதம் அடித்து பல்வேறு சாதனை படைத்த இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றினார்.
நான் - ஸ்டாப் (NON - STOP)
- தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
- ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ருசித்த இன்னிங்ஸ் வெற்றி தான் தென் ஆப்பிரிக்க அணி சந்திக்கும் மிகப்பெரிய தோல்வியாகும்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 5 வெற்றிகளுடன் 240 புள்ளிகள் பெற்று மலை உச்சியில் அமர்ந்துள்ளது. மற்ற அணிகள் மலைச்சரிவில் பாதையை தேடிக்கொண்டிருக்கின்றன.
- இந்திய அணியிடம் ஒயிட் வாஷ் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இன்னும் பள்ளிக்கணக்கைத் துவங்காமல் சோர்வடைந்துள்ளது.