மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 7-வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக அரை யிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி சனியன்று நடைபெற்ற தனது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் களமிறங்கி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கள மிறங்கிய இந்திய அணி ஷபலி வெர்மாவின் அதிரடியால் (47 ரன்கள்) 14.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை (116 ரன்கள்) எளிதாக எட்டியது. ஆட்டநாயகியாக இந்தியாவின் ராதா யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணிக்கு லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றதால் மார்ச் 4-ஆம் தேதி வரை போட்டிகள் கிடையாது. மார்ச் 5-ஆம் தேதி முதல் அரையிறுதியில் இந்திய அணி பங்கேற்க வுள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தற்போது நிறைவு பெற்றுள்ள 14 லீக் ஆட்டத்தில் இந்திய அணி மட்டுமே அரை யிறுதிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. * மற்றொரு ஆட்டத்தில் (13-வது லீக்) நியூஸிலாந்து அணி வங்க தேச அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் புரட்டியெடுத்தது.
யாருக்கு அரையிறுதி வாய்ப்பு?
“குரூப் ஏ” பிரிவில் இந்திய அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய, நியூஸிலாந்து அணிகளில் ஏதாவது ஒன்று முன்னேறும். இரு அணிகளும் சம புள்ளிகள் (4) மற்றும் சமபலத்தில் இருப்பதால் எந்த அணி முன்னேறும் என திடமாகக் கணிக்க முடியாது. “குரூப் பி” பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு அதிக வாய்ப்புள்ளது.