tamilnadu

img

பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி

கிரிக்கெட் உலகின் பணக்கார அமைப்பான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் மற்றும் பிற உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது.

தலைவர் பொறுப்புக்கு கிரிக்கெட் உலகின் தாதாவும், மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவருமான சவுரவ் கங்குலி வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். செயலர் பதவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகனும், குஜராத் கிரிக்கெட் சங்க உறுப்பினருமான ஜெய் ஷாவும், கேரள கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெயேஷ் ஜார்ஜ் இணைச் செயலர் பதவிக்கும், பிசிசிஐ முன்னாள்  தலைவரும், தற்போதைய மத்திய இணையமைச்சருமான அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமால் பொருளாளர் பதவிக்கும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான திங்களன்று மேற்குறிப்பிட்ட நபர்களை எதிர்த்து வேறு எவரும் போட்டியிட வேட்புமனு செய்யாததால் சவுரவ் கங்குலி உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.  எனினும் தலைவர் மற்றும் இதர பதவிகளுக்கான உறுப்பினர் விபரம் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின் முறைப்படி அறிவிக்கப்படும். பிசிசிஐ தலைவராகும் முதல் இந்திய கிரிக்கெட் வீரர் எனும் பெருமை விரைவில் கங்குலிக்கு கிடைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கங்குலிக்குச் சிக்கல் ஏற்படுத்திய என்.ஸ்ரீனிவாசன்

கிரிக்கெட் விளையாடாவிட்டாலும் தனது செயல் மூலம் அதிரடிக்குப் பெயர் பெற்ற முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீனிவாசன், கங்குலி தலைவராக நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் வீரர் பிரிஜேஷ் படேல் பெயரைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்தார். பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூர் கங்குலி பெயரை முன்மொழிந்து என்.ஸ்ரீனிவாசனுக்கு செக் வைத்தார். பின்னர் முன்னாள் செயலர் நிரஞ்சன் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனுராக் தாக்கூர் முன்மொழிந்த கங்குலி பெயர் பிசிசிஐ தலைவர் பதவிக்கு இறுதி செய்யப்பட்டது. என்.ஸ்ரீனிவாசன் பரிந்துரைத்த பிரிஜேஷ் படேலை ஐபிஎல் தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.