tamilnadu

img

இன்னும் 16 நாட்கள் உலகக் கோப்பை திருவிழா இங்கிலாந்து 2019

இந்தியாவின் செல்லப்பிள்ளையான ஆப்கானிஸ்தான் அணி 2017-ஆம் ஆண்டு ஐசிசி அந்தஸ்து பெற்றது. தொடக்கத்தில் திணறிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடுத்த 9 மாதங்களில் கத்துக்குட்டி அணிகள் அனைத்தையும் திணறவிட்டனர். 2018-ஆம் ஆண்டு தொடக்கத்தில் தரவரிசையில் அதிவேகமாக முன்னேறினர்.தற்போது டாப்-10 இல் உள்ள ஆப்கானிஸ்தான் அணி 12-வது சீசன் உலகக்கோப்பை தொடருக்குள் சிரமமின்றி நுழைந்தது. 

அணி வீரர்கள்

பேட்ஸ்மேன்கள் : நூர் அலி ஜத்ரன், அஸ்கர் ஆப்கான், நஜிபுல்லாஹ் ஜத்ரன், ஹஸரத்துல்லாஹ் ஜஜை, ஹாஸ்மதுல்லாஹ் ஷஹீதி.  

பேட்ஸ்மேன்களில் நூர் அலி ஜத்ரன், அஸ்கர் ஆப்கான், நஜிபுல்லாஹ் ஜத்ரன் ஆகியோர் சூப்பர் பார்மில் இருப்பதால் டாப் ஆர்டரில் சிக்கலின்றி ரன் குவிப்பார்கள்.அஸ்கர் ஆப்கான் ஸ்விங் மற்றும் பவுன்சரில் சற்று திணறுகிறார். 

ஆல்ரவுண்டர்கள் : ரஹமத் ஷா, சமியுல்லாஹ் ஷென்வாரி, குல்பதின் நைப், முகமது நபி.  

ஆல்ரவுண்டர்களில் சமியுல்லாஹ் ஷென்வரி, குல்பதின் நைப், முகமது நபி ஆகிய மூவரும் பேட்டிங், பந்துவீச்சில் சிறப்பாக செயல்படக் கூடியவர்கள்.ரஹமத் ஷா பந்துவீச்சில் மட்டும் திணறி வருகிறார். 

விக்கெட் கீப்பர்: முகமது சஷாத்.

அதிரடிக்கு பெயர் பெற்ற முகமது சஷாத் தொடக்க வீரராகக் களமிறங்குபவர். வேகம், சுழல் எனப் பந்துவீச்சை வேறுபடுத்திப் பார்க்காமல் அதிரடியாக விளையாடக் கூடியவர்.  

பந்துவீச்சாளர்கள்: ரஷீத் கான் (சுழல்), தௌலத் ஜத்ரன் (வேகம்), அப்தாப் ஆலம் (வேகம்), ஹமீத் ஹாசன் (வேகம்), முஜீப் உர் ரஹ்மான் (சுழல்).

ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள 5 பந்துவீச்சாளர்களில் ரஷீத் கான் மட்டுமே நல்ல பார்மில் உள்ளார். மற்ற அனைவரும் முக்கிய கட்டங்களில் சொதப்புகின்றனர்.

பலம்: டாப் ஆர்டர் பலமாக இருப்பதால் நன்கு ரன் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது. இளம்புயல் ரஷீத் கானின் உற்சாகமான பந்துவீச்சு மற்ற வீரர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும். இந்திய அணியின் முன்னாள் அதிரடி சேவாக்கின் சகோதரர் போல விளையாடிக் கொண்டிருக்கும் தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான முகமது சஷாத்தின் அதிரடி ஆட்டம் ஆப்கானிஸ்தான் அணிக்கு சாதகமான சூழலை உருவாக்கும். 

பலவீனம் : பந்துவீச்சில் சிறந்த வீரர்கள் இருந்தாலும் டெத் ஓவர்களில் சொதப்புகின்றனர். குறிப்பாக ரஷீத் கானை மட்டுமே ஒட்டுமொத்த அணியே நம்பியுள்ளது. பதற்றமான சூழலில் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி எதிரணிக்கு ரன்களை வாரி வழங்குகின்றனர்.இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த பேட்ஸ்மேன்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளை நன்கு ருசி பார்ப்பார்கள் என்பதால் இது மோசமான பின்விளைவை உருவாக்கும்.   

உலகக்கோப்பையில் எப்படி?

மூன்று பிரிவுகளில் பலமாக இருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணி கத்துக்குட்டியாக தான் உலகக் கோப்பையில் களமிறங்குகிறது. வங்கதேசம்,விண்டீஸ்,பாகிஸ்தான் ஆகியஅணிகளை ஓரளவு சமாளித்து வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.மற்ற நாடுகளைச் சமாளி ப்பது கடினம் தான் என்றாலும் தொடக்க வீரர் முகமது சஷாத் மற்றும் சுழல் மன்னன் ரஷீத் கான் ஆகியோர் மாயாஜாலம் காட்டினால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.     

நாளை : ஆஸ்திரேலியா....