ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த எலீஸ் பெர்ரி, சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில், 1000 ரன்கள் அடித்து, 100 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக 2-வது பெண்கள் டி20 போட்டி நேற்று ஹோவ் நகரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்தது. 122 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் 47 ரன்கள் (7 பவுண்டரி, 1 சிக்ஸர்) சேர்த்தார் பெர்ரி. இதன் மூலம் டி20 போட்டியில், 1000 ரன்களை எட்டிய பெருமையை அவர் பெற்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து வீராங்கனை நாட் ஸிவர் விக்கெட்டை வீழ்த்தியபோது, 100-வது விக்கெட்டை பெர்ரி வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 1000 ரன்கள் அடித்து, 100 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற புதிய சாதனையை பெர்ரி படைத்துள்ளார்.
ஆண்கள் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் இதுபோன்ற சாதனையைச் செய்யவில்லை. பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, டி20 போட்டியில் 1,416 ரன்களும், 98 விக்கெட்டுகளையும் மட்டுமே வீழ்த்தி இருந்தார். அதற்கு அடுத்தபடியாக வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன் 88 விக்கெட்டுகளையும், 1471 ரன்களையும் சேர்த்துள்ளார். ஆனால், எந்த வீரரும் 100 விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.