tamilnadu

img

உலகக் கோப்பைக்கான இந்திய அணியோடு பயணிக்கும் 4 இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் - பிசிசிஐ முடிவு

உலகக் கோப்பைப் போட்டிக்காக இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் உடன் 4 இளம் வேகப்பந்துவீச்சாளர்களை அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்தில் வரும் மே 30-ஆம் தேதி உலகக்கோப்பை போட்டித் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நிர்வாகம் நேற்று அறிவித்தது.

இதில் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் இருவரில் யாரைத் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றார். அதேபோல, நடுவரிசைக்கு தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசி பயிற்சி அளிக்கும் வகையில் 4 இளம் வேகப்பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்து இந்திய அணியுடன் பிசிசிஐ இங்கிலாந்து அனுப்புகிறது.

இது குறித்து பிசிசிஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘இங்கிலாந்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் சிறப்பாகத் தயாராகும் வகையில் 4 இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து செல்கிறார்கள். வேகப்பந்துவீச்சாளர்கள் கலீல் அகமது, ஆவேஷ் கான், நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகியோர் இங்கிலாந்து சென்று இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாகத் தயாராக வலைப்பயிற்சியில் பந்துவீசி பயிற்சி அளிப்பார்கள்.

இப்போது இந்த 4 வேகப்பந்துவீச்சாளர்களும் பல்வேறு ஐபிஎல் அணிகளுக்காக விளையாடி வருகின்றனர். ஆர்சிபி அணியில் விளையாடி வரும் நவ்தீப் சைனி ஐபிஎல் போட்டியில் அதிகபட்சமாக 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி வருகிறார். அதேபோல, தீபக் சாஹர் இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள கலீல் அகமது நல்ல வேகத்தில் பந்துவீசும் திறமை படைத்தவர். அதேபோல, ஆவேஷ் கானும் வேகமாக பந்துவீசும் திறமை கொண்டவர்கள் என்பதால், இங்கிலாந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் வலைப்பயிற்சியில் பந்துவீசுவதற்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.