குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதால் இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே. தென் ஆப்ரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இவரது தலைமையிலான இலங்கை அணி தொடரை வென்று சாதனைப் படைத்தது. இதனை அடுத்து உலகக் கோப்பைக்கான இலங்கை அணிக்கு இவரை கேப்டனாக நியமிக்கலாம் என பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கருணாரத்னே இன்று அதிகாலை 5.15 மணியளவில் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கின்சி சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். வெரல்லா பகுதியில் வந்தபோது, ஆட்டோ ஒன்றின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கருணாரத்னேவை கைது செய்தனர்.
அப்போது அவர் குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்தது. பின்னர், கருணாரத்னே சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.