tamilnadu

img

தொழில்நுட்பப் ‘புரவலர்’ கொரோனா!

‘சரகேட்ஸ்! ப்ரூஸ் வில்லிஸ் நடித்து, 2009இல் வெளிவந்த ஓர் ஆங்கிலப் படத்தின் பெயர்.

சரகேட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, நம் பணிகளுக்கு, நமக்கு பதிலாக மற்றொருவரைப் பயன்படுத்துவது என்று பொருள்.அந்தத் திரைப்படத்தில், நம் உருவத்திலான ஓர் எந்திரத்தை உருவாக்கித் தருவார்கள். ரோபோ என்பது நிரல்களால்(ப்ரொக்ராம்), இயங்கும். தற்போது, அவைகற்றுக் கொள்ளும் திறனுடன் உருவாக்கப்பட்டு, அது, செயற்கை நுண்ணறிவு(ஆர்ட்டிஃபிஷியல் இண்ட்டெலிஜன்ஸ்) என்று அழைக்கப்பட்டாலும் அவை எந்திரங்களே. 
மாறாக, இந்த சரகேட்-கள், நிகழ்நேரத்திலேயே(ரியல் டைம்) நேரடியாக நாம் கட்டுப்படுத்தக் கூடியவை என்பதால், முழுமையாக மனிதர்களுக்கு மாற்றாக, அத் திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும். அதாவது, பெரும்பாலான மனிதர்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல், இதற்கான கருவியில் படுத்துக்கொண்டே, சரகேட்களை இயக்கிக்கொண்டிருப்பார்கள். அதனால் நோய்த்தொற்று, விபத்து உள்ளிட்ட பலவும் தவிர்க்கப்படும் என்றாலும், உடல் உழைப்புக் குறைவால் நலக்குறைவு உள்ளிட்டவை ஏற்படுவதாகக் கூறி, அவை ஒழிக்கப்படுவதாக அத்திரைப்படம் முடிந்திருக்கும்.

அத்திரைப்படத்திலேயே, சரகேட்கள் சமூகத்துக்குக் கேடு என்று கூறி, அவற்றைக் கடுமையாக எதிர்த்துப் போராடும் தலைவரைத் தேடிப் போனால், அங்கும் அவருடையசரகேட்தான் இருக்கும். அதாவது, எதிர்த்தவர்களாலும் தவிர்க்க முடியாத தொழில்நுட்பம் என்பதுதான் மறைபொருள்!உண்மையில், பெரும்பாலான புதிய தொழில்நுட்பங்களைக் கண்டு நாம் “ஷை அவே”யாகத்தான் இருக்கிறோம். ‘வெட்கப்படுவது’ என்று நேரடிப் பொருள்கொண்டால்கூடப் பொருந்தும் என்றாலும், அந்த வினைத் தொடரின் உண்மையான பொருளான ‘தயக்கம்’ என்பதும் மிகவும் பொருந்தும் வகையில்தான்நம் நடவடிக்கைகள் அமைந்திருக்கும். 

இந்தத் தயக்கங்களையெல்லாம், சில நெருக்கடிகள் உடைத்து எறிந்ததுண்டு என்றாலும், மிகப் பெரிய தகர்ப்பை கொரோனா செய்திருக்கிறது என்றால் மிகையல்ல. பாதுகாப்பானதா, அவசியமா என்ற தயக்கமான சிந்தனைகளுக்கெல்லாம் இடமே அளிக்காமல், ஸ்மார்ட் ஃபோனே வைத்துக்கொள்ளாததை எளிமையென்று பேசியவர்களைக்கூட, பிள்ளைகளின் ஃபோனிலிருந்து, ஜும் மீட்டிங் அரங்கிற்குள் கொண்டு வந்துவிட்ட கொரோனாவுக்கு, “தொழில்நுட்பப் புரவலர்” என்று பட்டமே அளிக்கலாம்! ஆன்லைன் மீட்டிங் மட்டுமின்றி, ஆன்லைன் பேமெண்ட், ஈ-பாஸ் என்று, அச்சங்களை ஓரங்கட்டி, அனைத்தையும் ஆன்லைனில் செய்யத் தொடங்கிவிட்டோம். பெரும்பாலான நாடுகளில் உச்சத்தை அடைந்து, சரிந்துகொண்டுமிருக்கிற கொரோனா பாதிப்பு வரைபடம்(க்ராஃப்), இந்தியாவில், உச்சம் எங்கிருக்கிறது என்றே தெரியாமல், விலைவாசியின் வரைபடத்தைப் போல இன்னும் ஏறுமுகமாகவே இருக்கிறது. செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை மட்டுமின்றி, அதற்கு வாங்கிய கருவிகளின் தரமும் குறைவு என்பதும் வெளிப்பட்டிருக்கிற நிலையில், இயன்றவரை வெளியே செல்லாமல் தவிர்ப்பதுதான் பாதுகாப்பானது என்பதே பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

வீட்டுக்குள்ளேயே இருப்பது சிறையாகத் தோன்றுகிற நம் மனநிலைக்கு இது ஒவ்வாமற் போனாலும், தவிர்க்கவும் முடியவில்லை என்பதுதான் உண்மை என்றாகிவிட்ட நிலையில், வீட்டைவிட்டு வெளியே செல்லாமலேயே இயல்பு வாழ்க்கை சாத்தியம் என்று காட்டிய திரைப்படம் சரகேட்ஸ்! அத் திரைப்படம் கற்பனைதான் என்றாலும், நிச்சயம் எதிர்காலத்தில் வந்தே தீரவிருக்கிற அந்தத் தொழில் நுட்பத்தை, கொரோனா மிகவும் விரைவுபடுத்திவிட்டதாகவே தோன்றுகிறது!

===அறிவுக்கடல்===