ஜனவரி 20 அன்று, மருத்துவப் பயிற்சி பெற்ற தன்னுடைய ஆலோசகர் ஒருவருக்கு கே.கே. ஷைலஜா போன் செய்தார். அப்போதுதான் சீனாவில் பரவி வரும் ஆபத்தான புதிய வைரஸ் பற்றி இணையத்தில் அவர் படித்திருந்தார். ‘அது நமக்கு வருமா?’ என்று கேட்டார். ‘நிச்சயமாக வரும், மேடம்’ என்று பதில் கிடைத்தது. அதற்குப் பிறகு, தனது தயாரிப்பு வேலைகளை, அந்த கேரள மாநில சுகாதார அமைச்சர் உடனடியாகத் தொடங்கினார். அதற்கு நான்கு மாதங்களுக்குப் பிறகு, 524 நோயாளிகள் மட்டுமே கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு, நான்கு இறப்புகள் மட்டுமே அதனால் ஏற்பட்டுள்ள நிலையில், ஷைலஜாவின் கூற்றுப்படி சமூகப் பரவலும் அந்த மாநிலத்தில் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.
சுமார் மூன்றரை கோடி மக்கள் தொகை உள்ள மாநிலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,200 டாலர் மட்டுமே இருக்கின்றது. அதற்கு நேர்மாறாக, இங்கிலாந்து (இரட்டிப்பு மக்கள்தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தி 33,100 டாலர்) 40,000க்கும் அதிகமான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது; அமெரிக்கா (10 மடங்கு மக்கள் தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தி 51,000 டாலர்) 82,000க்கும் அதிகமான இறப்புகளைப் பதிவு செய்துள் ளது. இந்த இரண்டு நாடுகளிலும் மிக அதிகமாக சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளது.
ஷைலஜா டீச்சர் என்று அனைவராலும் அன்புடன் அறியப்படும், 63 வயதான அமைச்சர், கடந்த வாரங்களில் கொரோனா வைரஸைக் கொன்றவர், ராக்ஸ்டார் சுகாதார அமைச்சர் என்று சில புதிய புனைப்பெயர்களைப் பெற்றிருக்கிறார். அந்தப் பெயர்கள் அனைத்தும், கண்ணாடியுடன் தோற்றமளிக்கின்ற இந்த முன்னாள் இடைநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியருடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் இணைந்திருக்கின்றன. ஜனநாயகத்தில், ஏழ்மை நிறைந்த இடத்தில் மிகத் திறமையாக நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நிரூபித்ததற்காக அவர் பெற்றிருக்கின்ற பரவலான பாராட்டுதல்களையே இந்த புனைபெயர்கள் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.
அவர்கள் இந்த நிலைமையை எவ்வாறு அடைந்தார்கள்? சீனாவில் புதிய வைரஸ் வந்திருப்பதாகப் படித்த மூன்று நாட்களுக்குப் பிறகு, கேரளாவின் முதல் கோவிட் -19 நோயாளியைக் காண்பதற்கு முன்பாக, ஷைலஜா ‘விரைவு எதிர்வினைக் குழு’வின் முதல் கூட்டத்தை நடத்தினார். அந்தக் குழு அடுத்த நாள், ஜனவரி 24 அன்று, கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்து, கேரளாவின் 14 மாவட்டங்களில் உள்ள மருத்துவ அதிகாரிகளுக்கு தங்கள் மட்டத்திலும் அதைச் செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கியது. ஜனவரி 27 அன்று, வூஹானில் இருந்து விமானம் மூலமாக, முதல் நோயாளி வந்து சேர்ந்த நேரத்தில், உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருந்த சோதனை, தொடர்பறிதல், தனிமைப்படுத்தல், ஆதரவளித்தல் நெறிமுறையை அரசு ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருந்தது. சீன விமானத்தை விட்டு பயணிகள் வெளியேறிய போது, அவர்களுடைய உடல் வெப்பநிலை சரிபார்க்கப் பட்டது.
காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்ட மூன்று பேர் அருகிலிருந்த மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட னர். மீதமுள்ள பயணிகள் அனைவரும் வீட்டு தனிமைப் படுத்தலின்கீழ் வைக்கப்பட்டனர். ஏற்கனவே உள்ளூர் மொழியான மலையாளத்தில் அச்சிடப்பட்டிருந்த கோவிட் -19 பற்றிய தகவல் துண்டுப்பிரசுரங்களுடன், வீடுகளுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு கோவிட் -19 இருப்பது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது என்றாலும், அந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டது. தங்களுடைய திட்டத்தின் முதல் பகுதி வெற்றி என்று கூறும் ஷைலஜா, ஆனாலும் வைரஸ் சீனாவுக்கு அப்பால் தொடர்ந்து பரவியதால், விரைவிலேயே அது அனைத்து இடங்களிலும் இருந்தது என்கிறார்.
பிப்ரவரி பிற்பகுதியில், விமான நிலையத்தில் ஷைலஜா உருவாக்கியிருந்த கண்காணிப்புக் குழுவை எதிர்கொண்ட, வெனிஸிலிருந்து திரும்பி வந்திருந்த மலையாளி குடும்பம், தங்களுடைய பயண வரலாற்றைப் பற்றி சொல்வதைத் தவிர்த்துவிட்டு, அப்போது நடைமுறையில் இருந்த தரக்கட்டுப்பாடுகளை மீறி வீட்டிற்குச் சென்று விட்டது. கோவிட்-19 நோயாளியைக் கண்டறிந்த மருத்துவப் பணியாளர்கள், பின்னர் தொடர்பறிதல் மூலம் அவருக்கு அந்த குடும்பத்தினரிடம் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர். அவர்களுடைய தொடர்புகள் நூற்றுக்கணக்கில் இருந்தன. அவர்கள் அனைவரையும் விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியுடன் தொடர்பு கண்டறிபவர்கள் கண்டுபிடித்தனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆறு பேருக்கு கோவிட்-19 நோய் இருந்தது. மற்றொரு நோய்க் கொத்தும் வந்தது.
பாதிக்கப்பட்ட வளைகுடா நாடுகளிலிருந்து இப்போது ஏராளமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கேரளாவிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர், அவர்களில் சிலர் வைரஸைத் தங்களுடன் கொண்டு வந்திருந்தனர். மார்ச் 23 அன்று, மாநிலத்தில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்களுக்கு வருகின்ற அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டன. இரண்டு நாட்களுக்குப் பிறகு, நாடு தழுவிய ஊரடங்குக்குள் இந்தியா நுழைந்தது. கேரளாவில் வைரஸ் உச்சத்தில் இருந்த போது, 170,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரப் பணியாளர்கள் நேரடியாக அவர்களைப் பார்வையிடும் வகையில், கடுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
வீட்டின் உள்ளே குளியலறை இல்லாதவர்கள், மாநில அரசின் செலவில் மேம்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளில் தங்க வைக்கப்பட்டனர். பிறகு அந்த எண்ணிக்கை 21,000 ஆக சுருங்கிவிட்டது. ‘ஊரடங்கால் இங்கே சிக்கியிருக்கும் அண்டை மாநிலங்களில் இருந்து வந்துள்ள 150,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நாங்கள் இடமளித்து உணவளித்து வருகிறோம். அவர்களுக்கு நாங்கள் முறையாக உணவளித்து வந்தோம்.- ஆறு வாரங்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு. அந்த தொழிலாளர்கள் இப்போது சிறப்பு ரயில்களில் தங்களுடைய வீடுகளுக்கு அனுப்பப்படு கிறார்கள்’ என்று அமைச்சர் கூறுகிறார். கோவிட் -19க்கு முன்னதாகவே, ஷைலஜா இந்தியா வில் ஏற்கனவே பிரபலமானவர்.
கடந்த ஆண்டு, வைரஸ் என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது. அந்த திரைப்படம் 2018ஆம் ஆண்டில் இதனினும் மோசமான வைரஸ் நோயான நிபாவை அவர் கையாண்ட விதத்தால் கவ ரப்பட்டு எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் சற்றே கவலை யான தோற்றத்துடன் இருக்கின்ற கதாபாத்திரமாக தன்னைச் சித்தரித்திருப்பதை கண்ட அவர், உண்மையில், அப்போது தன்னால் பயத்தை வெளிப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார். செயலூக்கமான திறனுக்காக மட்டு மல்லாமல், நோய் அதிகம் பரவியிருந்த சமயத்தில் கிராமத்திற்கு வருகை தந்ததற்காகவும் அவர் மக்களால் பாராட்டப்பட்டார். நோய் எவ்வாறு பரவுகிறது என்பது புரியாததால், கிராம மக்கள் திகிலடைந்து தப்பி ஓடத் தயாரானார்கள்.
‘நான் எனது மருத்துவர்களுடன் அங்கு விரைந்தேன், நாங்கள் பஞ்சாயத்து அலுவலகத்தில் கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். நேரடித் தொடர்பு மூலம் மட்டுமே வைரஸால் பரவ முடியும் என்பதால், ஊரை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை என்பதை நான் விளக்கினேன். இருமல் உள்ள நபரிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டராவது தள்ளியிருந்தால், அந்த கிருமி உங்களிடம் பயணித்து வர முடியாது என்று நாங்கள் அதைப் பற்றி விளக்கிய போது, அவர்கள் அமைதியாகிவிட்டார்கள் – பின்னர் அங்கேயே தங்கி விட்டார்கள்’ என்று அவர் கூறுகிறார். அந்த நிபா வைரஸ் தாக்குதல், கோவிட் -19க்கு ஷைலஜாவை நன்றாகவே தயாரித்திருந்தது.
சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவுமில்லாத மிகவும் கடுமையான தொற்று நோயை எவ்வாறு தீவிரமாக கையாளுவது என்பதை அது அவருக்கு கற்பித்துக் கொடுத்திருந்தது. ஒருவிதத்தில், அவர் வாழ்நாளில் இரண்டு நோய் பரவலுக்கு தயாரானவராகி இருந்தார். அவர் உறுப்பினராக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), 1957ஆம் ஆண்டு முதல் இருந்து வந்திருக்கின்ற கேரள அரசாங்கங்களில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற கட்சியாகும் (அது 1964ஆம் ஆண்டு பிரிந்து செல்லும் வரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பகுதியாக இருந்தது). செயற்பாட்டு ஆர்வ லர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய குடும்பத்தில் அவர் பிறந்தார் – அவருடைய பாட்டி தீண்டாமைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தவர் – ‘கேரள மாதிரி’ என்று அழைக்கப்படுவது கீழிருந்து கட்டப்படுவதை அவர் பார்த்து வளர்ந்தவர்.
நாங்கள் பேசும்போது, அவர் அதைப் பற்றியே அதிகம் பேச விரும்பினார். நிலச் சீர்திருத்தம் (ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு நிலம் சொந்தமாக இருக்க முடியும், குத்தகைதார விவசாயிகளிடையே நில உரிமையை அதிகரிப்பது என்று சட்டம் மூலம் இயற்றப்பட்டது), பரவலாக்கப்பட்ட பொது சுகாதார அமைப்பு, பொதுக் கல்வியில் முதலீடு போன்றவை கேரளா மாதிரியின் அஸ்திவாரங்களாக இருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஆரம்ப சுகாதார மையம் உள்ளது. அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் மருத்துவமனைகள் உள்ளன. அத்துடன் 10 மருத்துவக் கல்லூரிகளும் இருக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவைச் சேர்ந்த பொது சுகாதார நிபுணர் எம்.பி.கரியப்பா கூறுகையில், மற்ற மாநி லங்களிலும் இதுபோன்றே இருக்கிறது என்றாலும், கேர ளாவில் இருப்பதைப் போன்று வேறு எங்கும் மக்கள் தங்கள் ஆரம்ப சுகாதார அமைப்பில் முதலீடு செய்யவில்லை என்கிறார்.
இந்தியாவிலேயே அதிக ஆயுட்காலம் மற்றும் மிகக் குறைந்த குழந்தை இறப்பை கேரள மாநிலம் கொண்டுள்ளது. இந்த மாநிலம் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாகும். ‘கல்வி பரவலாக கிடைக்கும் போது, தங்களு டைய நல்வாழ்விற்கு ஆரோக்கியம் மிகமுக்கியமானது என்ற திட்டவட்டமான புரிதல் மக்களிடையே இருக்கும்’ என்று கரியப்பா கூறுகிறார். ‘போராட்டங்களைப் பற்றி - விவசாய இயக்கம் மற்றும் சுதந்திரப் போராட்டம் - என் பாட்டியிடமிருந்து கேள்விப்பட்டி ருக்கிறேன். அவர் நல்ல கதைசொல்லியாக இருந்தார்’ என்று கூறும் ஷைலஜா, ஊரடங்கு போன்ற அவசரகால நடவடிக்கைகள் மத்திய அரசாங்கத்தின் கைகளில் இருந்தாலும், ஒவ்வொரு இந்திய மாநிலமும் தன்னுடைய சொந்த சுகாதாரக் கொள்கையைக் கொண்டிருக்கிறது.
கேரள மாதிரி இல்லையென்றால், கோவிட் -19க்கு தனது அரசாங்கத்தின் எதிர்வினை இவ்வாறு இருப்பதற்குச் சாத்தியமில்லை என்பதை வலியுறுத்திக் கூறுகிறார். வயதாகி விட்டதன் அறிகுறிகளை மாநில ஆரம்ப சுகாதார நிலையங்கள் காட்டத் தொடங்கியுள்ளன. ஷைல ஜாவின் கட்சி 2016ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, அது ஒரு நவீனமயமாக்கல் திட்டத்தை மேற்கொண்டது. இந்தியாவில் பெரிய பிரச்சனையாக இருக்கின்ற, மருத்துவமனைகள் மற்றும் சுவாசநோய்களுக்கான பதிவேட்டை உருவாக்குவது போன்ற செயல்பாடுகள் தொற்றுநோய்க்கு முந்தைய நடவடிக்கையாக மேற் கொள்ளப்பட்டன. ‘அதன் பொருள் என்னவென்றால், நாங்கள் கோவிட்-19க்கு மாறுவதைக் கண்டறிந்து சமூகப் பரவலைக் கவனிக்க முடியும். அந்த நடவடிக்கைகள் எங்களுக்கு மிகவும் உதவின’ என்று ஷைலஜா தெரி விக்கிறார்.
நோய் பரவல் தொடங்கியபோது, ஒவ்வொரு மாவட்டமும் இரண்டு மருத்துவமனைகளை கோவிட்-19க்காக அர்ப்ப ணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது, அதே நேரத்தில் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் 500 படுக்கைகளை ஒதுக்கித் தந்தன. தனி நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வழிகள் உருவாக்கப்பட்டன. பணக்கார மேற்குலக நாடுகளை நோய் அடைந்த பிறகு, நோய் கண்டறி தல் பரிசோதனை கருவிகள் மிகக்குறைவாகவே கிடைத்தன. எனவே நோய் அறிகுறிகளுடன் இருப்பவர்கள், நோயுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள், நோய் அறிகுறியற்ற நபர்களில் சிலருக்கு மட்டும், நோய் அதிகம் பாதிக்கக் கூடிய பகுதிகளில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், தொண்டர்களுக்கு மட்டும் அவை ஒதுக்கித் தரப்பட்டன. 48 மணி நேரத்திற்குள் கேரளாவில் பரிசோதனை முடிவு கள் பெறப்படுவதாக ஷைலஜா கூறுகிறார்.
‘வளைகுடா வில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைப் போன்ற தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்திருக்கும் அனைத்து நாடுக ளும் – அவர்கள் ஏழு நாட்களுக்கு காத்திருக்க வேண்டி யிருக்கிறது’ என்று அவர் கூறுகிறார். அங்கெல்லாம் என்ன நடக்கிறது என்பது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றாலும், அந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அளவிலான இறப்பு எண்ணிக்கை திகைப்பை ஏற்படுத்துவதாக அவர் கூறுகிறார். ‘பரிசோதனை மிகவும் முக்கியமானது - தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவ மனை கண்காணிப்பு – போன்றவற்றை அந்த நாடுகளில் உள்ள மக்கள் பெறவில்லை’ என்கிறார். அங்கே நடப்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது.
அந்த நாடுகளில் வசிக்கும் மலையாளிகள் அவருக்கு போன் செய்து அதைச் சொல்லியிருக்கிறார்கள். ஊரடங்கு விதிகளின் கீழ் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் அதற்கு எதிர்ப்புக்கள் எழுந்தன. ஆனால் கேரளாவில் அந்த எதிர்ப்பு குறிப்பி டத்தக்க அளவில் இல்லை - ஒருவேளை மாநில முதல மைச்சர் பினராயி விஜயன், உள்ளூர் மதத் தலைவர்க ளுடன் ஊரடங்கு குறித்து ஆலோசித்ததால் அவ்வாறு நடந்திருக்கலாம். ‘கேரளாவின் உயர் கல்வியறிவு நிலை, அதற்கான மற்றொரு காரணியாகும். தாங்கள் ஏன் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை மக்கள் புரிந்துகொள்கிறார்கள்.
அதை உங்களால் அவர்களுக்கு விளக்க முடியும்’ என்று ஷைலஜா கூறுகிறார். ஊரடங்கை மே 17 அன்று நீக்க இந்திய அரசு திட்ட மிட்டுள்ளது (அது ஏற்கனவே இரண்டு முறை நீட்டிக்கப் பட்டுள்ளது). அதன்பிறகு, பெரிதும் பாதிக்கப்பட்ட வளைகுடா பிராந்தியத்தில் இருந்து கேரளாவிற்கு மலை யாளிகள் பெருமளவில் வருவார்கள் என்று ஷைலஜா கணிக்கிறார். ‘அது ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்றா லும் நாங்கள் அதற்குத் தயாராகி வருகிறோம்’ என்று அவர் கூறுகிறார். ஏ, பி மற்றும் சி திட்டங்கள் உள்ளன, சி திட்டம் - மிக மோசமான சூழ்நிலை – அப்போது ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் மாநாடு நடைபெறும் மையங்களில் 165,000 படுக்கைகள் தேவைப்படும். அப்போது 5,000க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள் தேவைப்பட்டால், அதிகம் போராட வேண்டியிருக்கும். அதிகமான எண்ணிக்கையில் அவை சேகரித்து வைக்கப் பட்டிருந்தாலும் - குறிப்பாக தொடர்புத் தடமறியும் போது, மனிதவளமே உண்மையில் பிரச்சனையாக இருக்கும் என்பதால் நாங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம் என்று ஷைலஜா கூறுகிறார்.
இரண்டாவது அலை கடந்துவிட்டால் - உண்மையில், இரண்டாவது அலை என்ற ஒன்று இருந்தால் - இந்த ஆசிரி யர்கள் பள்ளிகளுக்குத் திரும்பி விடுவார்கள். இறுதியாக இதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அவர் இருக்கிறார், ஏனென்றால் அவரது அமைச்சர் பதவிக்காலம் இன்னும் ஒரு வருடத்தில் மாநிலத் தேர்தல் வரும் போது முடிவடையும். கோவிட் -19 இன் அச்சுறுத்தல் எந்த நேரத்திலும் குறைந்துவிடும் என்று அவர் நினைக்க வில்லை என்பதால், தன்னுடைய வாரிசுக்கு அவர் எந்த ரகசியத்தைச் சொல்லித்தர விரும்புகிறார் என்ற கேள்விக்கு அந்த ரகசியம் ‘சரியான திட்டமிடல்’ என்பதைத் தவிர வேறு ரகசியமல்ல என்பதால், நம்மையும் தொற்றிக் கொள்ளும் வகையில் அவர் சிரிக்கிறார்.
நன்றி : 2020 மே 14, தி கார்டியன் இதழ் தமிழில் : பேரா தா.சந்திரகுரு