tamilnadu

img

கோவையில் மாணவிகள் படங்களை மார்பிங் செய்து மிரட்டிய இளைஞர் கைது!

கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளி மாணவிகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி தெக்கலூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமியின் மகன் மணிகண்டன் (20). இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். பெயிண்டிங் வேலை செய்து வரும் இவர், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தன்னுடன் பள்ளியில் படித்த ஒரு மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து, அந்தப் படத்தை மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு அனுப்பியதாக தெரியவந்துள்ளது. மேலும், இதேபோல் அவர் பல மாணவிகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து அனுப்பி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி, தன்னுடன் படித்த வாலிபர் தனது புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி வருவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரது பெற்றோர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் வடிவேல்குமார், பாதிக்கப்பட்ட மாணவியின் வயது குறித்து விசாரணை செய்ததில், இது போக்சோ சட்டத்தின் கீழ் வரும் வழக்கு என உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, குற்றவாளியை சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
மேற்கொண்டு விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரமாதேவி, மணிகண்டன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தார். மேலும், அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது, பல மாணவிகளின் புகைப்படங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.