மேட்டுபாளையத்தில் கருங்கல் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய சுவர் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதி ஏடி காலனியில் ஏராளமான அருந்ததிய குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சக்கரவர்த்தி துகில் மாளிகை என்கிற பிரபல ஜவுளிக் கடையின் உரிமை யாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் ஆறுமுகம் ஆகியோரது சொகுசு வீடு உள்ளது. இதைச்சுற்றி கருங்கல் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. மழை பெய்தால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் அருந்ததிய மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியிலேயே ஒவ்வொரு முறையும் மழைநீர் தேங்கி நின்று வந்துள்ளது. ஆகவே, இச்சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித நடவடிக்கை யும் மேற்கொள்ளாமல் அலட்சியப்படுத்தியே வந்துள்ளனர். இந்நிலையில்தான் கடந்த இரண்டு நாட் களாக மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக, ஏற்கனவே பலவீனமாக இருந்த சுற்றுச்சுவர் திங்களன்று அதிகாலை இடிந்து அருந்ததியர் குடியிருப்புகளின் மீது விழுந்தது. இதில் நான்கு வீடுகள் முற்றிலும் மண் மூடியதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் உள்ளிட்டு 17 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியாகினர்.
இந்நிலையில் இன்று வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியத்தை கோவை தனிப்படைகாவல் துறையினர் கைது செய்துள்ளனர்.