tamilnadu

img

முழு ஊரடங்குக்கு அவசியமில்லை

கோவை ஆட்சியர் தகவல்

கோயம்புத்தூர், ஜுன் 23- கோவையில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையைப் போன்று, மதுரை, திருவண்ணாமலை ஆகிய உள் மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. திங்களன்று 62 ஆயிரத்து 87 பேருக்கு தமிழகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோன்று கோவை மாவட்டத்தில் தற்போது வரை 280 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 2ஆம் தேதி நிலவரப்படி, கோவையில் 147 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில், அடுத்த 20 நாட்களில் 100க்கும் அதிகமானோருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 1 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால், வெளியூர்களிலிருந்து கோவை வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த சூழலில் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஜூன் 19ஆம் தேதி 29 பேருக்கும், 20ஆம் தேதி 11 பேருக்கும், 21ஆம் தேதி 12 பேருக்கும், 22ஆம் தேதி 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை, மதுரை போன்று கோவையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு செவ்வாயன்று (ஜூன் 23) பதிலளித்துள்ள மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவையில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் மூலம் செவ்வாயன்று 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவரை வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வந்த 17 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு நாளும் சுகாதாரத் துறை மூலமாக 2000 பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து வருவதால் உள்ளூர் மக்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது ஊரடங்கு தேசிய அளவில் பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இருசக்கர வாகனங்கள், விமானங்கள் மற்றும் ரயில்கள் மூலம் வெளியிலிருந்து வரக்கூடிய மக்கள் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளாமல் வருவதால்தான் தொற்று பாதிப்பு அதிகளவு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.