கோவை:
கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த வெள்ளியன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஜக்கி வாசுதேவ் பங்கேற்று அங்கு கூடியிருந்த பொது மக்கள் மத்தியில் பேசினார். அப்போது தமிழகத்தில் நிறைய பள்ளிகள் மாட்டு மந்தைகள் போல உள்ளது. அரசாங்கம் பள்ளியை நடத்துவதற்கு பதில், பள்ளிகளை நடத்தும் ஆர்வம் இருப்பவர்களிடம் ஒப்படைத்துவிடலாம். கல்வி கட்டணம் கட்டிப் படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்கு, அரசு அந்த பணத்தை கட்டிக்கொள்ளட்டும் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், டிகிரி வாங்கியும் இளைஞர்களிடம் எந்த திறமையும் இல்லாத நிலை இருக்கின்றது. விவசாய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வரலாம் எனவும், ஆனால் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றபடி அவற்றை அமல்படுத்தலாமா என்பதை மாநில அரசின் முடிவிற்கு விட்டு விட வேண்டும். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அரசு பள்ளிகளை நடத்தக்கூடாது தனியார்கள் நடத்த வேண்டும் என்பது சரியா என்ற கேள்விக்கு, பள்ளிகளை தனியார்மயமாக்க வேண்டும் என சொல்லவில்லை. குழந்தைகளை நல்ல பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என எல்லோரும் நினைப்பார்கள், எனவே அதற்கான தரத்தை நிர்ணயித்து அதை யார் கொடுக்கின்றனரோ அவர்களிடம் பள்ளிகளை கொடுக்க வேண்டும் என தனது முந்தைய பேச்சை மாற்றிப் பேசினார்.
இதேபோன்று பல நாடுகளில் கட்டிடங்கள் கட்டிக்கொள்ள ஒற்றைச்சாளர முறை உள்ளது. இங்கே பல தடைகள் உள்ளதால் இது இடையூறாக உள்ளது. பல துறைகளில் நோ அப்ஜக்சன் சான்றிதல் கேட்பதால் கட்டுமானத்திற்கு தடை ஏற்படுகிறது என தன்னுடைய ஆசிரம விரிவாக்கத்திற்கு ஏற்பட்டுள்ள இடையூரை மறைமுகமாக புலம்பினார். மொத்தத்தில் ஜக்கியின் பேச்சு சாக்கடைப்பேச்சாக இருந்ததாக ஊடகவியலாளர்கள் நொந்து கொண்டனர். இருப்பினும் இதனை பிரசுரிக்க முடியாது என்பதையும் வெளிப்படையாக புலம்பிச்சென்றனர்.
அ.ர.பாபு