கோவையில் உள்ள இந்துஸ்தான் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவி அனுப்பிரியா (19), 4ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் வானதி. இவரது மகள் அனுப்பிரியா(19). இவர் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் சுகாதாரம் மற்றும் அறிவியல் கல்லூரியில் சுவாச சிகிச்சைப் பிரிவில் முதலாமாண்டு படித்து வந்தார். மேலும் மாணவி அனுப்பிரியா கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று கல்லூரி மருத்துவமனைக்கு பயிற்சிக்காக வந்த மாணவர் ஒருவர் அங்கிருந்த ஆய்வகத்தில் பணியாற்றியுள்ளார். அப்போது அவரின் கைபை மாயமானதாகவும், அதில் ரூ.1,500 பணம் இருந்த்தாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் சிசிடிவி காட்சி ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஆய்வகத்திற்கு சென்று வந்ததாக அனுப்பிரியா மற்றும் மற்றொரு முதலாமாண்டு மாணவரை கல்லூரி நிர்வாகத்தினர் அழைத்து மதியத்தில் இருந்து இரவு 7 மணி வரை விசாரித்துள்ளனர். விசாரணையின் போது மாணவி அனுப்பிரியாவை கடுமையாக பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உலைச்சலில் இருந்த அனுப்பியா விசாரணைக்கு பின் வெளியே வந்து மருத்துவமனையின் 4-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்த அவர் சுயநினைவு இழந்த நிலையில் மீட்கப்பட்டு அதே மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாணவி உயிரிழப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், கல்லூரி நிரி்வாகத்தினர் நேரில் வந்து விளக்கம் அளிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என சக மாணவ, மாணவிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே மாணவியின் தாய் வானதி கூறும் போது : மாடியில் இருந்து கீழே விழுந்ததாக தெரிவித்தனர். ஆனால் வேறு எந்த விவரமும் கூறவில்லை. சிறிது நேரத்தில் வந்துகொண்டு இருக்கும் போதே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். உரிய நீதி வழங்க வேண்டும். என்ன பிரசன்னை என்று கூட கூறவில்லை என தெரிவித்தார்.