கோவை:
மக்கள் வரிப்பணத்தில் உருவான பொதுச்சொத்துக்களை விற்று பணத்தை திரட்டுவது காட்டை விற்று கள்ளு குடிப்பதற்கு ஒப்பானதாகும் என ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் மக்களவை தலைவருமான பி.ஆர்.நடராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை சர்வதேச விமான நிலைய அலுவலக கூட்டரங்கில் பன்னாட்டு விமானநிலைய ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசுகையில், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி 24 கட்டங்களாக பிரிக்கப்பட்டு ஏறத்தாழ 628 ஏக்கர் நிலம்
கையகப்படுத்தப்பட்டு விரைவில் பணிமேற்கொள்ளப்பட உள்ளது. கையகப்படு த்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையாக இதுவரை ரூ.29 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 1390 கோடி நிதி போர்க்கால அடிப்படையில் பெற்று வழங்கப்பட உள்ளது. தொழில் நிறுவனங்கள் மற்றும்பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டு ஒரு நல்ல மாதிரியான விமான நிலையமாக உருவாக்கப்படும் என்றார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகர போலீஸ் துணை ஆணையர் முத்துசாமி, பன்னாட்டு விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன், திமுக முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை விமான நிலையம் - உதகை ரயில் குத்தகைக்கு
இதன்பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை பன்னாட்டு விமானநிலைய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும், பணிகளை விரைந்து முடிக்கவும் பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்துள்ளோம். இதனை நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியரும் உறுதியளித்துள்ளார்.அதேநேரத்தில் மக்களின் வரிப்பணத்தில் விமான நிலையங்கள் உள்ளிட்டபல்வேறு பொதுத்துறைகள் உருவாக்கப் பட்டுள்ளன. இவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு, சமூக நீதி உள்ளிட்ட அம்சங்கள் கிடைக்கப் பெற்றது. ஆனால், தற்போதை ஒன்றிய பாஜக அரசு அனைத்து சொத்துக்களையும் விற்பதிலேயே அக்கறை காட்டுகிறது.நஷ்டத்தில் இயங்குகிற நிறுவனத்தைத் தான் தனியாருக்கு கொடுக்கிறோம் என்றுமுதலில் சொன்னார்கள். ஆனால் தற்போது லாபத்தில் இயங்குகிற எல்ஐசி போன்ற துறைகளை ஏன் தனியாருக்கு விற்கிறீர்கள்? என்கிறபோது அதற்கொரு வியாக்கியானத்தை கற்பிக்கிறார்கள். மொத்தத்தில்தங்களுக்கு விசுவாசமான கார்ப்பரேட்டுகளுக்கு மக்கள் வரிப்பணத்தில் உருவான சொத்துக்களை விற்பது என்கிற முழு முதல் முடிவோடு ஒன்றிய பாஜக அரசு செயல்படுகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை தள்ளுபடி செய்வதும், மறைமுகமாக எளிய மக்களின் மீது வரி மேல் வரியை திணிப்பதுமாக மக்கள் விரோத ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் உள்ளன. தற்போது கோவை விமான நிலையம், உதகை ரயில் போன்றவற்றை தனியாருக்கு குத்தகைக்கு விடும் அறிவிப்பை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
விற்பதற்கல்ல பாதுகாக்கவே
பாஜகவை அதிகாரத்தில் மக்கள் அமர்த்தியது இந்திய நாட்டின் சொத்துக்களை பாதுகாப்பதற்கே தவிர அதனை விற்பதற்காக அல்ல. பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் அனைத்திற்கும் எஜமானர்கள் நமது மக்களே, அதனை விற்பதற்கான அதிகாரத்தை யாரும்வழங்கவில்லை. பணத்தை திரட்டுகிறோம் என்கிற பெயரில் பொதுத்துறை சொத்துக்களை விற்பது என்பது காட்டை விற்று கள்ளு குடிப்பதற்கு ஒப்பாகும். உடனடியாக ஒன்றிய அரசு இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை கைவிட வேண்டும். இது தொடரும் என்றால் மக்கள் போராட்டங்கள் தவிர்க்க முடியாது, என்றார்.