கோவை, ஏப்.13-
கோவையில் மூளை காய்ச்சல் ஏற்பட்ட தொழிலாளிக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டு வந்த நிலையில் சிஐடியு முயற்சியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கொரனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனைகளில் மற்ற நோய் பாதிப்புகளுக்கு மருத்துவம் அளிக்க மறுக்கும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம், சூலூர் தாலுகா அரசூர் பகுதியில் எல்.எம்.டபிள்யூ நிறுவனத்தில் பணிபுரிகின்ற ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு தொழிலாளிக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவ உதவி கோரி மூன்று முறை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவரை உள் நோயாளியாக சேர்த்து மருத்துவம் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்த தகவல் கோவை மாவட்ட சிஐடியு சங்கத்தின் நிர்வாகிகளின் கவனத்திற்கு வந்தநிலையில், அங்கே நேரடியாக களத்தில் சென்று ஆய்வு செய்தனர். இதன்பின் இதுகுறித்து அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். சிஐடியு எடுத்த முயற்சியால், அரசின் உதவியோடு கோவை அரசு மருத்துவமனையில் அத்தொழிலாளி உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.