tamilnadu

img

ஈசாவில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை - தாயார் புகார்

ஈசா யோகா மையத்தில் உள்ள பள்ளியில் கல்வி பயின்ற தனது மகனுக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்டவரின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த பெண், கோவையிலுள்ள ஈசா யோகா மையத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், அவரது கணவர் கமிட்டி உறுப்பினராகவும் பணியாற்றி வந்துள்ளார். ஜக்கி வாசுதேவின் உரைகளை கேட்டு ஈர்க்கப்பட்டதாக தெரிவித்த அந்த பெண், கடந்த 2013 ஆம் ஆண்டு ஈசா மையத்துடன் நேரடியாக பல்வேறு களப்பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது அவர் தன் மகனை ஈசா யோகா மையத்தில் இயங்கும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளார். இந்நிலையில், தனது மகன் 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை, மாணவர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதாக, அவரது தாயார் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரைச் சேர்ந்த பொருளாதாரத்தில் வலிமையான குடும்ப பின்னணியில் உள்ள ஒரு சிறுவன், தன் மகனை 3 வருடங்களாக நள்ளிரவில் துன்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அப்பள்ளி நிர்வாகத்திடம் சிறுவன் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படாமல், சிறுவனை ஈசா யோகா மையத்தினர் ஒரு வாரம் தங்கள் கஸ்டடியில் வைத்துள்ளனர். இக்காலகட்டத்தில் தன் மகன் கடும் மன உளைச்சலுக்கும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே ஈசா யோகா மையத்தில் தன் மகனுக்கு நேர்ந்த அவலம் தெரியவந்த பொழுது, பள்ளி நிர்வாகத்திடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் தெரிவித்துள்ளார்.  பள்ளி நிர்வாக தரப்பு, நடவடிக்கை எடுக்காமல் தட்டிக் கழித்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட போலீசில் ஆன்லைன் மூலமாக ஐதராபாத்தில் இருந்து அப்பெண் புகார் தெரிவித்திருந்தார். இன்று அவர் தன் மகனுடன் போத்தனூர் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.