மூளை சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் குடும்பத்தனரின் ஒப்பதலுடன் தானமாக வழங்கப்பட்ட நிலையில், அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (40). இவர் கடந்த 7 ஆம் தேதியன்று இரவு சாலையை கடக்க முயன்ற போது வாகன மோதி படுகாயம் அடைந்தார். இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிவக்குமார் மூளை சாவடைந்தார்.
இதனைத்தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்த மருத்துவர்கள், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருமாறு அறிவுறுத்தினர். இந்நிலையில், குடும்ப உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, அவரது இருதயம் மற்றும் சீறுநீரகங்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்த சிவகுமாரின் உடலுக்கு மருத்துவமனை நிர்வாகம் அரசு மரியாதை செலுத்தி உடலை அனுப்பி வைத்தனர்.