tamilnadu

img

கோவை: காட்டு மாடு தாக்கி வனக்காவலர் உயிரிழப்பு!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் தோலம்பாளையம் பகுதியில் பணியில் இருந்த வனக்காவலர் அசோக்குமார், காட்டு மாடு தாக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கானிக்காரன் மலைவாழ் பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (52). இவர் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி தோலம்பாளையம் பகுதியில் உள்ள மலிவீரன் என்பவரது தோட்டத்தில் காட்டு மாடு புகுந்ததாக அசோக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வேட்டை தடுப்பு காவலர்களுடன் அங்கு சென்ற அசோக்குமார் தோட்டத்தில் இருந்த காட்டு மாட்டை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார், அப்போது புதரில் மறைந்து இருந்த காட்டுமாடு திடிரென அசோக்குமாரை கொம்பால் குத்தி வீசியது. இதில் உடல் சரிந்த நிலையில் அவர் மயக்கமடைந்தார். இதனையடுத்து அங்கிருந்த சக பணியாளர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அசோக்குமார் இன்று காலை உயிரிழந்தார். காட்டு மாடு முட்டியதில் மார்பு எழும்பு உடைத்து நுரையீரலில் ரத்தபோக்கு ஏற்பட்டதே உயிரிழப்பிற்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அசோக்குமார் உடலுக்கு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வருதீன், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், வனச்சரகர்கள் உள்ளிட்ட வனத்துறை ஊழியர்கள் அசோக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு ஆம்புலென்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 

இது குறித்து பேசிய அவரது சகோதரர் சுரேஷ்சாமி கூறும் போது: பழங்குடி கிராமத்தில் பிறந்து வனத்துறையில் பணியாற்றிய அசோக்குமாருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அவரது மகள் தான் பழங்குடி கிராமத்தில் இருந்து வேளாண்மை பட்டப்படிப்பிற்குச் செல்லும் முதல்பட்டதாரி, மகன் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அசோக்குமார் காட்டு மாட்டை விரட்ட சென்ற போது உயிரிழந்தார். அசோக்குமாருக்கு வயது 52, வனத்துறையில் வயதுக்கு ஏற்ப பணிகளை கொடுக்க வேண்டும். தற்போது உயிரிழந்த அசோக்குமார் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு வழங்கப்படுவது போன்று இழப்பீட்டை வழங்க வேண்டும். தாமதிக்காமல் அவரது மகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும். மேலும் ராணுவத்தினருக்கு இருப்பது போல வனத்துறை ஊழியர்களுக்கு என்று தனி மருத்துவ கட்டமைப்புகளை அமைக்க வேண்டும். இரவு பகல் பார்க்காமல் கடுமையாக பணியாற்றி வனத்துறை ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.