பொள்ளாச்சி அருகே மின்சாரம் தாக்கி இரு பெண் காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம், கோட்டூர் பிரிவு பருத்தியூர் உமாண்டி மலை சரக பகுதியில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தின் மேட்டுப்பகுதியில் இரு பெண் யானைகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
காட்டு யானைகள் மேட்டுப்பகுதியிலிருந்த தாழ்வான நிலத்தடி பகுதியை கடந்து வரும் வழியில் மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து வனச்சரக அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் பார்க்கவே தேஜா, பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் ஞானபாலமுருகன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவர் விஜயராகவன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நாளை காலை யானைகளுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்வார்கள் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.