tamilnadu

தமிழ்நாட்டில் 1000 இடங்களில் “மக்கள் விசாரணை மன்றம்”.... 1ம் பக்கத் தொடர்ச்சி

அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பல்லாயிரக் கணக்கான ஊழியர்களும், உள்ளாட்சியில் தூய்மை பணியாளர்களும், மத்திய, மாநில அரசுகளின் திட்ட பணிகளிலும் நீண்ட காலமாக தொகுப்பூதியமுறை மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி
யாற்றிவரும் அனைவருக்கும் ஏற்கனவே, அரசின்சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்எனவும், மேலும் படிப்படியாக பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது.வேலைவாய்ப்பின்மை என்பது தொடர்ச்சி யாக அதிகரித்து வருகிற சூழலில், அதை குறைப்ப தற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என அறிவித்திருக்கும் பின்னணியில், முதற்கட்டமாக இத்தகையபணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் மக்களிடையே பகைமையை விதைக்க முயற்சிக்கும் பாஜகவிற்கு கண்டனம்

தனது வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை நாடு முழுவதும் தொடர்ச்சியாக அமல்படுத்தி வரும் பாஜக, தமிழகத்திலும் அத்தகைய முயற்சியை துவக்கி இருக்கிறது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்கள் ஆக்க வேண்டும் எனும் தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதன் முதற்கட்டமாக ஒரு சிலருக்கு பணி நியமன ஆணையை வழங்கியிருக்கிறது தமிழக அரசு. பரவலாக தமிழக மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள இம்முயற்சிக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், இத்திட்டத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்திலும், சாதியக் காழ்ப்புணர்ச்சியோடும் மோசமான பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட முயல்கிறது பாஜக. சமூக ஊடகங்களிலும், பேட்டிகளிலும் பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளை சார்ந்தவர்கள் இதற்கு எதிராகவும், மக்களிடையே பகைமை உணர்வை தூண்டிவிடும் வகையிலும் பேசி வருகின்றனர்.

அதே போல இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் விஷயத்திலும் அரசியல் உள்நோக்கத்தோடு பிரச்சாரம் செய்வதோடு உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பியும் வரு
கின்றனர். மிக நீண்டகாலமாக, சாதி மத அடையாளங்களை கடந்து, சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிற தமிழக மக்களிடையே இத்தகைய பகைமை உணர்ச்சிகளை தூண்டி விடுகிற பாஜகவின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் வகுப்புவாத கண்ணோட்டத்தோடு தனது குறுகிய அரசியல் லாபத்திற்காகவும் முன்னெடுக்கப்படும் இத்தகைய முயற்சிகளை தமிழக மக்கள் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் எனவும், தமிழ்நாட்டின் சமூக மத நல்லிணக்கத்தை மேலும் உறுதியாக முன்னெடுத்துச்செல்ல ஒன்றுபட்டு நிற்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் முறையை நடைமுறைப்படுத்திட வேண்டும்

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்காக உறுப்பினர்கள், தலைவர்கள் மற்றும் மேயருக்கான தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. இத்தகைய நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிற போது, பேரூராட்சி, நகராட்சிகளுக்கான தலைவர்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கான மேயர் ஆகியோரை நேரடியாக மக்களே வாக்களித்து தேர்வு செய்யும் முறையை கடைப்பிடிக்க வேண்டுமெனவும், அதற்கேற்ப முறையில் உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

ஒட்டர்பாளையம் சம்பவம் :முழுமையான விசாரணை நடத்திடுக!

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் 6.8.2021 அன்று நடைபெற்ற சம்பவத்தை முழுவதும் ஒளிப்பதிவு செய்த போலி ஊடகவியலாளர் ஒரு சம்பவத்தின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டுள்ளார். அது சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது, முதல் கட்டதகவல்கள் அடிப்படையில் சாதிய வன்கொடுமை என்ற வகையில் அதனை ஊடகங்களும் பதிவு செய்தன. 

இதன் காரணமாக வன்கொடுமை சம்பவத்திற்குபல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பாக விசாரணை நடத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுஉள்ளது. இந்நிலையில் புதிய ஒளிப்பதிவு காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளது, அதில் தனது நிலத்தின் பட்டா மாறுதலுக்காக கிராம நிர்வாக அலுவலகம் சென்ற விவசாயியை கிராம உதவியாளர் தாக்கி உள்ள காட்சி பதிவு ஆகி உள்ளது.  முழு சம்பவத்தையும் பதிவு செய்திருந்த நபர், முதலில் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டுள்ளார். சுய ஆதாயத்திற்காக தவறான உள்நோக்கத்தோடு சமூக அளவில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அரசு அமைத்த விசாரணைக்குழு முன்பு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர்  ஆகியோர் உண்மை சம்பவத்தை மறைத்துள்ளனர். இச்சம்பவத்தில் மாநில முழுமையான விசாரணை நடத்தி தவறான ஒளிப்பதிவு காட்சி வெளியிட்ட நபர்கள் மீதும் உண்மை சம்பவத்தை மறைத்த அரசு ஊழியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்.

முழு செய்தியையும் பிடிக்க 1-ஆம் பக்கம் பார்க்க...