tamilnadu

img

கோவையில் பட்டியலின இளைஞர் அடித்து கொலை - 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

கோவை ரத்தினபுரி அருகே பட்டியல் இன இளைஞரை சரமாரியாகத் தாக்கிக் கொலை செய்த வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் மற்றும் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை ரத்தினபுரி சின்ராஜ் நகரைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வன். இவரது சகோதரர் கடந்த 2016- இல் தனது நண்பரோடு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது தில்லைநகர் அருகே வழிமறித்த கார்த்திக் மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரும் கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாகச் சாதிப் பெயர் சொல்லித் திட்டி தாக்கியுள்ளனர்.

இதையடுத்து தகவலறிந்து சென்ற தாமரைச் செல்வன் இச்சம்பவ குறித்துக் கேட்டு கார்த்திக் மற்றும் மகேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அதே தினம் இரவு தாமரைச் செல்வன் வீட்டின் அருகே உள்ள கோவிலில் ஊர் மக்களோடு கோவில் நிகழ்ச்சி குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது அங்கு கார்த்திக் மற்றும் மகேந்திரன் நண்பர்களோடு வந்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் தப்பி ஓடிய தாமரைச் செல்வன் வீட்டிற்குள் சென்ற போதும் அவரை விடாமல் கதவை உடைத்து வெளியே இழுந்து கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்தனர்.

இந்த வழக்கில் 14 பேரை ரத்தினபுரி காவல்துறையினர்  கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை எஸ்.சி. எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அதில் தல வக்கி, மகேந்திரன், கார்த்திக், கவாஸ்கான், சுரேஷ், பிரகாஷ், நவீன், விமல், கவுதம், கலைவாணன் ஆகிய 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியும், கருப்பு கவுதம், சைமன் கிருஸ்டோபர் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி விவேகானந்தன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் விஜய் என்பவர் விடுவிக்கப்பட்டார், ஜெய் சிங் என்பவர் இறந்து விட்டார். இதையடுத்து 12 பேரும் கோவை மத்தியச் சிறைக்கு அனுப்பட்டனர்