முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் உழைப்பை சுரண்டிய தமிழக அரசே காலமுறை ஊதியத்தை வழங்கி அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அங்கன்வாடி ஊழியர்கள் கோவையில் வெள்ளியன்று ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், வாழ்வதற்கேற்ற ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக தற்போது கொடுக்கப்படும் ஒரு லட்ச ரூபாயினை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் இயக்கத்தை முன்னெடுக்க அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் அழைப்பு விடுத்தது.
இதன்தொடர்ச்சியாக கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி தண்டுமாரியம்மன் கோவில் முன்பு இருந்து நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர். இதனையடுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர் களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் சாந்தி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மங்கை உள்ளிட்டோர் உரையாற்றினர்.