உலகளாவிய நோய் தொற்று குறித்த அறிவிப்பை உலக சுகாதார மையம் மார்ச் 11, 2020 அன்று வெளியிட்டது. அன்றைய தினம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போது, “கொரோனா வைரஸ் கிருமியால் ஏற்படுத்தப்பட்டுள்ள முதல் தொற்றுநோய் இது” என உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதநோம் கெப்ரெயேசஸ் குறிப்பிட்டார். “கடந்த இரண்டு வாரங்களில் சீனாவிற்கு வெளியே கோவிட்-19 வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 13 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், பாதிப்பிற்குள்ளான நாடுகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது” என அவர் கூறினார். மார்ச் 11ம் தேதியிலிருந்து, இந்த வைரஸ் மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒன்று என்பதும், சுலபமாக மனித சமூகத்தினுள் புகுந்துவிடக் கூடிய ஆற்றல் இதற்கு உண்டு என்பதும் தெளிவானது. ஆனால், இது எப்போதும் மிகத் தெளிவான ஒன்றாக இருக்கவில்லை.
வௌவால்களில் அல்லது பாங்கோலின்களில் (தென்ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் எறும்பு தின்னும் ஒருவகை விலங்குகள்) காணப்படும் எந்தவொரு வகையான கொரோனா வைரஸ்களிலும் கண்டிராத ‘பாலிபாசிக் பிளவு தளம்’ என அழைக்கப்படும் ‘பிறழ்வு’ புதிய கொரோனா வைரசின் மரபணுக்களில் இருப்பதாகவும், இந்த வைரஸ் மனிதர்களிடையே பல ஆண்டுகளுக்கு முன்னரே பரவியிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது; உண்மையில் அது வுஹானிலிருந்துதான் பரவியிருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும்அமெரிக்காவின் ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி மையத்தின் கிறிஸ்டியன் ஆண்டர்சன் மற்றும் அவரது குழுவினர் மார்ச் 17ம் தேதியன்று குறிப்பிட்டனர். இதற்கு முன்னர் பிப்ரவரி 20ம் தேதியன்று குவாங்டாங் பயன்பாட்டு உயிரியல் வளங்களின் நிறுவனத்தின் டாக்டர் சென் ஜின்பிங்கும் அவரது குழுவினரும் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில், புதிய கொரோனாவைரசானது பாங்கோலின் கொரோனாவைரஸ் இனத்திலிருந்து நேரடியாக மனிதர்களுக்கு பரவியது என்று சொல்லப்படுவதை தங்களது ஆதாரக் கூறுகள் நிரூபிக்கவில்லை என்று குறிப்பிட்டனர். “கோவிட்-19 முதலில் சீனாவில்தான் கண்டறியப்பட்டது என்றாலும், அது அங்குதான் உருவாகியிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை” என சிறந்த, கொள்ளைநோய் நிபுணரான ஜோங் நன்ஷான் குறிப்பிட்டார்.
இந்த வைரஸ் பற்றிய அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் தொடரும். இறுதியில், நமது ஐயங்களை எல்லாம் போக்கி இது பற்றிய முழுமையானதொரு புரிதலை நமக்கு அளித்திடும். இந்த வைரஸ் உஹானின் சந்தையில் நேரடியாகத் தோன்றி பரவியது என்பதில் தற்போது எந்த தெளிவும் இல்லை.
மேற்கத்திய நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறபோதும், மேற்கத்திய ஊடகங்கள் வைரஸின் தோற்றுவாய் குறித்து அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத தகவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன. வுஹானின் மருத்துவர்களோ அல்லது சீனாவிலுள்ள பொது சுகாதார நிபுணர்களோ சொல்பவற்றை அவர்கள் நிச்சயமாக காது கொடுத்து கேட்கவில்லை.
டிசம்பர் மாதத்தில் வுஹானின் மருத்துவர்கள் தங்களது மருத்துவமனைகளில் இத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை முதன்முதலாகப் பார்த்தபோது, இவர்களுக்கு செய்யப்பட்ட சிடி ஸ்கேன் அறிக்கைகள் இவர்களது நுரையீரல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதைக் காட்டியபோதும், நிமோனியாவிற்கு அளிக்கப்படும் வழக்கமான மருத்துவ சிகிச்சைகளுக்கு இந்நோயாளிகளிடம் எந்த விளைவும் இல்லாதிருந்தபோதும், இந்நோயாளிகள் நிமோனியா நோயாலேயே பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மருத்துவர்கள் நம்பினர். இந்நிலை மருத்துவர்களை கவலை கொள்ளச் செய்தது. ஆனால், இது ஓர் மாகாண அளவிலான தொற்றாகவும், அதன் பின்னர் உலகளாவிய தொற்று நோயாகவும் அதிகரிக்கப் போகிறது என எண்ணிப் பார்க்க எந்த காரணமும் இருக்கவில்லை.
வுஹானின் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தங்கள் முன் உள்ள ஆதாராங்களை இறுதியில் உணரத் துவங்கினர். இது இதற்கு முன்னெப்போதும் பார்த்திராத வைரஸ் என்பதும், இது வேகமாகப் பரவுகிறது என்பதும் தெளிவான உடனேயே, சீனாவின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தையும் அதன் பின்னர் உலக சுகாதார அமைப்பையும் அவர்கள் தொடர்பு கொண்டனர்.
சீன அரசு இத்தொற்று நோய் குறித்த தகவல்களை மூடி மறைத்தது என்றும் சீன அரசு மேற்கொண்ட எச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படவில்லை என்ற தகவலை பரவலாக சுற்றுக்கு விட்ட மேற்கத்திய நாடுகளின் நாளிதழ்களை – குறிப்பாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழை மட்டும் – படிப்பவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு இதுவெல்லாம் தெரிந்திருக்காது.
இவர்கள் முன் வைக்கும் இத்தகைய வாதங்களெல்லாம் உண்மையல்ல என்பதை எங்களது ஆய்வு உறுதிப்படுத்தியது. நோய் குறித்த தகவலை சீன அரசு திட்டமிட்டு மூடி மறைத்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நோய் குறித்த தகவலை அளிப்பதற்கு நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறையின்படி நடந்து கொள்ளாமல், பொதுமக்களுக்கு இத்தகவலை வெளிப்படுத்தியதற்காக மருத்துவர்கள் சிலர் அவர்களது மருத்துவமனைகளாலோ அல்லது உள்ளூர் காவல்துறையினரலோ எச்சரிக்கப்பட்டனர் என்பதற்கு மட்டுமே ஆதாரங்கள் உள்ளன. சீன அரசின் நேரடி அறிக்கையிடல் முறை தவறானது என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, முன்பின் அறிந்திராத அல்லது வகைப்படுத்தப்படாத மர்மநோய்க்கு எதிரான ஏற்பாடுகளை வேறெந்த நடைமுறையைப் போன்றே, இந்த நடைமுறையாலும் சுலபமாக செய்து கொள்ள இயலாமல் போனது என்பதுதான் உண்மை. ஆனால் இப்பிரச்சனை குறித்த தகவலை அளித்திட மருத்துவ ஊழியர்களுக்கு நெடுங்காலம் பிடிக்கவில்லை. உயர்மட்ட ஆய்வுக் குழு வுஹானை வந்தடைய இன்னமும் கூட குறைவான நேரமே பிடித்தது. இன்றும் ஆய்வு செய்யப்போனால், விரிவான விபரங்கள் இருக்கின்றன.
டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் மேலும் அதிகமான நோயாளிகள் வுஹான் மருத்துவமனைக்கு வந்தனர். இந்நோயாளிகளுக்கெல்லாம் நிமோனியா நோயின் அறிகுறிகள் காணப்படுவதோடு, இவர்களது நுரையீரல் குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் தாண்டி வேறெதுவும் தெரியாத நிலையிலேயே இன்னமும் மருத்துவர்கள் இருந்தனர். இப்பிரச்சனையின் முதல் அறிகுறி தென்பட்டதிலிருந்து 5 நாட்களுக்குள் பெய்ஜிங்கிலிருந்து அதிகாரிகள் வுஹானை வந்தடைந்தனர்.
பெய்ஜிங்கிலிருந்து நிபுணர் குழு வந்தடைவதற்கு ஒரு நாள் முன்னதாக, இந்த மர்ம வைரஸ் குறித்த தனது விரக்தியை மருத்துவக் கல்லூரியில் தன்னுடன் பயின்றவர்கள் சிலருடன் டாக்டர் யெய் பென் பகிர்ந்து கொண்டார். அடையாளம் காண இயலாத நிமோனியாவின் பரிசோதனை அறிக்கையை டாக்டர் யெய் பென் கண்டார். அறிக்கையில் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்த “சார்ஸ் கொரோனா வைரஸ்” என்ற சொற்றொடரை சுழித்து, அதை புகைப்படம் எடுத்து, தன்னுடன் மருத்துவக் கல்லூரியில் பயின்றவர் ஒருவருக்கு அனுப்பினார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான டாக்டர் லீ வென்லியாங் மற்றும் பின்னர் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்ட 7 இதர மருத்துவர்கள் உள்ளிட்ட வுஹானில் உள்ள இதர மருத்துவர்களிடையே இந்த அறிக்கை பரவியது. ஜனவரி 2ம் தேதியன்று, இந்நோய் குறித்த தகவலை மருத்துவனையின் தகவல் பரிமாற்ற வழிகளுக்கு அப்பாற்பட்டு வெளியே பகிர்ந்து கொள்ள வேண்டாம் என டாக்டர் யெய் பென், வுஹான் மத்திய மருத்துவமனையின் கண்காணிப்பு துறையின் தலைவரால் எச்சரிக்கப்பட்டார்.
வைரஸ் குறித்த தகவலை சீன அரசு மூடி மறைத்தது என்பதற்கு இவ்வாறு மருத்துவர்கள் எச்சரிக்கப்பட்டதே ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது. இது பகுத்தறிவுக்கு ஒவ்வாத வாதமாகும். மருத்துவர்கள் எச்சரிக்கப்பட்ட நிகழ்வுகள் ஜனவரி மாதத் துவக்கத்தில் நிகழ்ந்தன. பெய்ஜிங்கிலிருந்து உயர்மட்ட குழு டிசம்பர் 31ம் தேதி வந்தடைந்தது. அன்றைய தினமே உலக சுகாதார அமைப்பிற்கு தகவல் அளிக்கப்பட்டது. இவ்விரு மருத்துவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்படுவதற்கு முன்னரே சீன நோய் கட்டுப்பாட்டு மையத்திற்கும், உலக சுகாதார அமைப்பிற்கும் தகவல்கள் அளிக்கப்பட்டு விட்டன.
நிலைமை குறித்து ஆய்வு செய்ய புலனாய்வு குழு ஒன்றை வுஹான் நகருக்கு அனுப்பிட தேசிய கண்காணிப்பு குழு பிப்ரவரி 7 அன்று முடிவெடுத்தது. இக்குழு தங்களது ஆய்வறிக்கையை மார்ச் 19, 2020 அன்று வெளியிட்டது. மேலும், தாங்கள் உறுதிப்படுத்திய விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. ஆய்வு முடிவுகள் அளித்த விவரங்களின் விளைவாக, டாக்டர் லீ வென்லியாங்கிற்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கைக் கடிதத்தைத் திரும்பப் பெறுமாறு சுற்றறிக்கை ஒன்றை வுஹான் மக்கள் பாதுகாப்பு மையம் வெளியிட்டது. ஏப்ரல் 2ம் தேதியன்று, டாக்டர் லீ வென்லியாங்கும் இதர 13 மருத்துவர்களும் இந்த வைரஸ் நோய்க்கிருமியை எதிர்த்துப் போராடுவதில் உயிரிழந்தபோது, அவர்கள் தியாகிகள் என சீன அரசால் அழைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. (இது சீன கம்யூனிஸ்ட் கட்சியாலும், தனது குடிமக்களுக்கு மக்கள் சீன குடியரசாலும் அளிக்கப்படும் உயர்ந்தபட்ச மரியாதையாகும்).
இத்தொற்று நோய் குறித்த தகவலை பெய்ஜிங்கிற்குத் தெரிவித்திட உள்ளூர் அதிகாரிகள் அச்சம் கொண்டிருந்தனர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டதைப் போல், இப்பிரச்சனையை வெளிச்சத்திற்குக் கொண்டுவர குரலெழுப்பியவர்கள் மீது சீன அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. டாக்டர் ஜாங் இவ்வாறு குரல் எழுப்புபவர் அல்ல. தகவல் பரிமாற்றத்திற்கு சீனாவில் ஏற்கனவே உள்ள நடைமுறையை அவர் பின்பற்றினார். சில நாட்களிலேயே தகவல்கள் உலக சுகாதார மையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.