tamilnadu

திருப்பூர் மற்றும் காங்கேயம் முக்கிய செய்திகள்

திருப்பூர் நகரின் மையப்பகுதியில் தேங்கியுள்ள மண் குவியலை அப்புறப்படுத்த கோரிக்கை


திருப்பூர், ஏப். 21 -திருப்பூர் நகரின் சந்தடி மிக்க மையப் பகுதியில் மின் கம்பிவடம் பதிப்பதற்காக தோண்டப்பட்ட மண் குவியல் காரணமாக பொது மக்களுக்கு இன்னல் ஏற்படுவதால் அதை அகற்றுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிஷின் வீதி கிளைச் செயலாளர் ஜி.செந்தில்குமார் மின்வாரிய செயற்பொறியாளருக்கு வெள்ளியன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் நகரில் அரிசிக்கடை வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி பகுதிகளில் நிலத்தடி மின்கம்பி திட்டப் பணிக்காக குழிகள் தோண்டி மின் கம்பிகள் பதிக்கப்பட்டு விட்டன. குழி தோண்டியதால் சாலைகள் பழுதடைந்துள்ளன. மண் குவியல் மலை போல் ஆங்காங்கே தேங்கியுள்ளன. போக்குவரத்துக்கு இடையூறாகவும், மண் சரிந்தும் இருசக்கர வாகனங்கள் விபத்து அதிகமாகி உள்ளது. மண் புழுதிக் காற்றில் பறந்து சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. இது தொடர்பாக மின்வாரிய அலுவலர்களுக்கு தொலைபேசி மூலம் பல முறை புகார் கொடுத்தும் எவ்வித சீரமைப்புப் பணியும் நடைபெறவில்லை. மெத்தனமாக உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கும், மக்கள் சுகாதாரத்துக்கும் இடையூறாக உள்ள மண் குவியலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் இணைப்புப் பணிகளையும் வேகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


திருப்பூர் ரயில் நிலையத்திற்கு சிறந்த பராமரிப்புக்கான விருது


திருப்பூர், ஏப்.21-திருப்பூர் ரயில் நிலையத்திற்கு சிறந்த பராமரிப்புக்கான விருதை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது.சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களின் சுகாதாரம், பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, அந்த ரயில்வே நிர்வாக அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. சேலத்தில் நடந்த ரயில்வே வார விழாவில் இந்த விருதை நிலைய மேலாளர் சுனில்தத்திடம் சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் வழங்கினார். இதுமட்டுமின்றி சிறப்பாக பணியாற்றிய திருப்பூரை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட 20 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 9 மாதங்களில் ரூ.1கோடியே 12 லட்சம் வருமானம் ஈட்டப்பட்டது. சேலம் கோட்டத்தில் திருப்பூர் ரயில் நிலையம் அதிக வருமானம் ஈட்டியதற்கும் பாராட்டு சான்றிதழ் கிடைத்துள்ளது. 


காவலர் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு


 திருப்பூர், ஏப்.21.திருப்பூரில் காவலர் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.திருப்பூர் கே.வி.ஆர்.நகர் அய்யப்பன் நகரை சேர்ந்தவர் மீனாட்சி (75). இவர் சனியன்று கருவம்பாளையத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பூச்சக்காடு ரேசன்கடை அருகே இருநபர்கள் மீனாட்சியை வழிமறித்து நாங்கள் மப்டியில் இருக்கும் போலீசார், இந்த பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் நகையை கழற்றி கொடுங்கள், பைக்குள் வைத்து தருகிறோம். வீட்டுக்கு சென்று எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இதை நம்பிய மீனாட்சி தான் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். அவர்கள் வெள்ளை காகிதத்தில் வைத்து நகையை மடித்து, மூதாட்டியின் மஞ்சள் வைத்து அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு சென்ற மீனாட்சி தனது பையை திறந்து பார்த்தபோது வெள்ளை காகிதத்துக்குள் நகையை காணவில்லை. அதிர்ச்சியடைந்த மீனாட்சி, திருப்பூர் மத்திய காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அரசு பள்ளி மாணவர்கள் சாதனை


 காங்கேயம், ஏப்.21-காங்கேயம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். காங்கேயம் ஒன்றியத்தில் உள்ள நத்தக்காடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். காங்கேயம் அரசு பள்ளியில் 99.15 சதவிகிதமும், படியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 98.9 சதவிகிதமும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். காங்கேயம் அரச மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர் 569 மதிப்பெண் பெற்றுள்ளார். காங்கேயம் அரசு பள்ளியில் 117 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 116 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.