tamilnadu

சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை வேண்டும்

 கோயமுத்தூர், மார்ச். 14 –

சிபிசிஐடி, சிபிஐ அமைப்புகள் மத்திய மாநில ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொள்ளாச்சியில் கள ஆய்வு மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி கொடூரம் குறித்து கள ஆய்வு நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து ஜி.ராமகிருஷ்ணன், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினர் பாலபாரதி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையிலான குழுவினர் புதனன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கள ஆய்வு நடத்தினர். இந்த கள ஆய்வில் இச்சம்பவத்தை ஆரம்பம் முதல் கண்காணித்து வரும் சமூக ஆர்வலர்கள், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள், இக்கொடூர சம்பவம் நடைபெற்ற வீடு மற்றும் அருகருகே உள்ள வீடுகள், பெண்கள், பொது மக்களிடம் விசாரித்து தகவல்களை சேகரித்தனர்.

இதனைத்தொடர்ந்து பொள்ளாச்சியில் உள்ள வங்கி ஊழியர் சங்கத்தின் அரங்கில் செய்தியளார் சந்திப்பு நடைபெற்றது.

இதில் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தை மட்டுமல்லாது நாட்டையே உலுக்கியுள்ள இக்கொடூர சம்பவத்தை மார்க்சிஸ்ட் கட்சி கள ஆய்வு மேற்கொண்டது. பொள்ளாச்சியில் நடைபெற்ற இக்கொடூர சம்பவத்தில் காவல்துறையினரின் நடவடிக்கை திருப்திகரமானதாக இல்லை. காவல்துறையினரின் நடவடிக்கை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இக்கொடுமை ஓராண்டு இராண்டாக நடைபெறவில்லை. 200க்கும் மேற்பட்ட மாணவிகள், பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களை மிரட்டி, மயக்கி சின்னம்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்கார கொடுமை செய்யப்பட்டு அதனை வீடியோ எடுத்து பணம் பறிக்கும் சமூக விரோத செயல் கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்றுள்ளது தெரியவருகிறது. அந்த வீடியோவில் பெண்கள் கதறுவதை பார்த்தால் மனம் பதறுகிறது. ஒரு சிறிய பேரூராட்சி கிராமத்தில் உள்ள வீட்டிற்கு விலை உயர்ந்த கார் வருகிறது. சம்பந்தமே இல்லாதவர்கள் வருகிறார்கள். இச்சம்பவங்கள் அக்கம் பக்கத்தினருக்கு தெரியாது என சொல்லி விட முடியாது. நிச்சயம் சந்தேகம் வந்திருக்கும். பெண்களின் கதறல் சத்தம் கேட்டிருக்கும். இது காவல்துறையினரின் கவனத்திற்கும் சென்றிருக்கும். ஆனால் காவல்துறைக்கு தெரிந்திருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதிலிருந்தே சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

இவ்விகராத்தில் நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் சிலரின் மீது அடிதடி வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏழாண்டுகாலமாக நடைபெற்று இருக்கும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இக்கும்பலின் நடவடிக்கைகளில் உள்ள மாற்றம் குறித்து காவல்துறையினருக்கு ஏன் சந்தேகம் வரவில்லை என்பதே கேள்வி. ஒரு பெண் மருத்துவரிடம் பெண் குரலில் பேசி பிறகு பேசியதை உனது கனவரிடம் காட்டுவேன் என மிரட்டி பணம் பறித்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் எதிர்கால வாழ்க்கையின் மீதான அச்சத்தில் வெளியில் சொல்லவோ புகார் அளிக்கவோ வாய்ப்பில்லை என்பது எதார்த்தமானதுதான். இதன் தொடர்ச்சியாக ஒரு அடிதடி சம்பவம் நடைபெற்று இப்பின்னனியில் புகார் அளிக்கப்பட்டு இக்கொடூர சம்வம் அம்பலத்திற்கு வந்துள்ளது. ஏழாண்டுகளாக நடைபெற்ற இக்கொடூர சம்பவம் தொடர்பாக 60 வீடியோக்கள் எங்களிடம் உள்ளது என பொள்ளாச்சி சரக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் இதனை காவல்துறையினர் ஈவ்டீசிங் உள்ளிட்ட சாதாரண வழக்காக பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எங்களிடம் நான்கு வீடியோக்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கிறார். ஏன் மறைக்கிறார் இதனை மறைக்க வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியை எழுப்புகிறோம்.

ஆளும் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரின் குடும்பத்தை சார்ந்தவர்கள் சிலர் சம்பந்தப்பட்டுள்ளார்கள், அரசியலில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்கிற தகவலும், ஏழு ஆண்டுகள் நடைபெற்ற இச்சம்பவம் காவல்துறையினருக்கு தெரியவில்லை என்பதும் ஏற்கமுடியாது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

தமிழக அரசு ஏற்கனவே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. தற்போது சிபிஐ விசாரணை கோரியுள்ளது. இவ்விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். காரணம் சிபிசிஐடி காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டிலும், சிபிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆகவே சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இவ்விசாரணை நடைபெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும், 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது நான்கு பேர் மட்டும் இதனை செய்துள்ளார்கள் என்பதை ஏற்க முடியாது. பெரிய கும்பல் ஒன்று இதில் சம்பந்தப்பட்டுள்ளது. அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் என்பதால் மூடிமறைத்து கிடப்பில் போட அரசு முயற்சிப்பதை மார்க்சிஸ்ட் கட்சி அனுமதிக்காது. இது அரசியல் நடவடிக்கை அல்ல. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிரான போராட்டம். வாச்சாத்தி கிராமத்தில் பாலியல் பலாத்காரத்திற்குட்பட்ட பெண்களின் நீதிக்காய் 20 ஆண்டுகாலம் வழக்கை நடத்தி சம்பந்தப்பட்ட வனத்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு தண்டணையை பெற்றுத்தந்த இயக்கம். சிதம்பரம் பத்மினி, சின்னாம்பதி என பெண்களின் உரிமைக்காய், நீதிக்காக தொடர்ந்து போராடும் மார்க்சிஸ்ட் கட்சி தற்போது பாதிக்கப்பட்ட பெண்களின் நீதிக்காய் தொடர்ந்து போராடும், முன்னிற்கும்.

இச்சம்பவத்தில் காவல்துறையினரின் விசாரணையில் திருப்தியில்லை.  இப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ளவர்தான் மதுக்கடைக்கு எதிராக போராடிய ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்தவர். பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்ணின் பெயர் முகவரி தெரிவிக்ககூடாது என்பது சட்டம். ஆனால் புகார் அளித்த பெண்ணின் பெயரை வெளியிட்டதன் மூலம் வேறு யாரும் புகார் கொடுக்க கூடாது என்பதற்கான மிரட்டலை எஸ்பி செய்துள்ளார் என்றே சந்தேகிக்கிறோம். இவ்விகாரத்தை மூடி மறைப்பதற்கு காவல் துறை முயற்சிக்கிறது என்பதே எங்கள் குற்றச்சாட்டு. ஆகவே பெண் காவல் அதிகாரி விசாரணை செய்ய வேண்டும் உண்மையை வெளிக்கொணர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. மேலும் கடந்த ஏழு ஆண்டுகளில் இப்பகுதியில் நடைபெற்ற தற்கொலை, விபத்து போன்றவற்றால் மரணமடைந்த பெண்கள் குறித்து மறு விசாரணை நடைபெற வேண்டும்.

இக்கொடூரத்தை கண்டித்து தொடர்ந்து மாதர் சங்கம் போராட்டம் நடத்தியிருக்கிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக வெள்ளியன்று மனிதசங்கிலி போராட்டமும், பொள்ளாச்சியில் வருகிற 19 ஆம்தேதி கடையடைப்பு போராட்டம் அனைத்து எதிர்க்கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தை நடத்திவருகிறது.

இக்கொடூரத்தை கண்டு தன்னெழுச்சியாக பொள்ளாச்சி மாணவர்கள் போராடியுள்ளனர். இவர்களை காவல்துறையினர் கடுமையாக தாக்கி கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் இச்செயலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. கொடுமையை கண்டு இயல்பாக போராடினால் தாக்குவதை ஏற்க முடியாது என்றார். என்றார்.

முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் செய்திளார்களிடம் கூறுகையில், பொள்ளாச்சி பகுதியில் ஏழாண்டுகளாக காவல்துறை பொறுப்பில் உள்ளவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும். இவர்களின் இயலாமையால் இது நடைபெற்றது என்பதை ஏற்க முடியாது. மேலும், இவர்கள் பொறுப்பில் இருந்த காலத்தில் பிரதிபலனாக என்ன பெற்று இருக்கிறார்கள் என்பதை விசாரணை செய்ய வேண்டும் என்றார்.