கோவை, மே 13-சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமியை ஆதரித்து சூலூர் திடலில் மதிமுக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், மத்தியில் நடக்கும் வெறிபிடித்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையம் நடுநிலை தவறிவிட்டது என முன்னாள் தேர்தல் அதிகாரி குர்சி கூறுகிறார். ராணுவத்தை தேர்தலில் பயன்படுத்த கூடாது.ஆனால் நடத்தை விதிகளை மீறி மோடி பேசி வருகிறார். மோடியின்விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டிக்கவில்லை. மோடி தரம் தாழ்ந்து பேசி வருகிறார். உயர் மின் கோபுரங்கள், கெயில், பெட்ரோலியம், நீர்என பல திட்டங்கள் பகுதிக்குஒன்று என தமிழக மக்களையும், நிலத்தையும் அழித்து வருகிறார்கள். மேலும் தமிழகத்தில் பூத்துக் குலுங்கும் இயற்கை வளத்தை அழிக்க வேண்டும் என பாஜக அரசு செயல்படுகிறது. மோடி கூட்டத்துக்கு அடிமை பணி செய்கிறது எடப்பாடி அரசு. 13 பேரை சுட்டுக்கொன்றது கைக்கூலி எடப்பாடி அரசு. கஜா புயலில் 89 பேர் இறந்தார்கள். தானே புயலில் 19 பேர் இறந்தார்கள். இவை பிரதமருக்கு தெரியுமா? எதை வைத்து தமிழக மக்களிடம் பிரதமர் மோடி வாக்கு கேட்கிறார். மேலும், பொள்ளாச்சி பகுதியில் 300 பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்துள்ளார்கள். மருத்துவமனையில் குழந்தைகள் கடத்தப்படுகின்றன. ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை கொடுத்து ஏழ்மையில் இருப்பவர்களிடம் குழந்தைகளைப் பெற்று 1 இலட்சத்துக்கு விற்ற கொடுமை தமிழகத்தில் நடந்துள்ளது. தமிழகத்தில் குழந்தைகளுக்கும் கொடுமை நடந்துள்ளது. எனவே தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பு திமுகவின்ஆட்சி அமையும். மு.க.ஸ்டாலின்தலைமையில் அமையும் ஆட்சியில் தமிழகத்திற்கான விடியல் பிறக்கும் என்றார். இந்த பொதுக்கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர் நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக திமுகவேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமி உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு உரையாற்றினார்.