tamilnadu

ஆசைய தூண்டி ஏமாத்துனவங்கள மாத்தனும்

கோவை மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன பழுது நீக்கும் பணி மனைகள் உள்ளன. இதனை நம்பி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் புது, புது சட்டங்களால் அத்தொழிலாளர்களின் வாழ்நிலை எவ்வாறு மேம்பட்டுள்ளது என அறிய அத்தகைய தொழிலாளர்களில் சிலரை சந்தித்து பேசினோம். அப்போது அவர்கள் பேசியது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள சாலை பாதுகாப்பு மசோதா எல்லாம் சுத்தமா நடைமுறைக்கு ஒத்துவராது. முன்னாடி எல்லாம் வாரத்திற்கு 15 வண்டி வேலை செய்வோம். வண்டி நிறுத்த இடமிருக்காது. 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது போனப்புறம், ஜிஎஸ்டி வந்த பிறகு நிலைமை தலை கீழாயிடுச்சு. இப்ப வண்டி வர்ரதில்லை. நாங்க கஸ்டமர தேடிப் போயி வண்டி எடுத்து வந்து, தேடிப் போய் டெலிவரி கொடுக்க வேண்டியிருக்கு. வட்டிக்கு வாங்கி பசங்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கு. இந்த நிலைமை மாறும். நிறைய வேலை வரும் என்ற நம்பிக்கையில் தான் கடன் வாங்குகிறோம் என்கிறார் உமர்.20 வருடங்களாக இந்த வேலை செய்து வருகிறேன்.


இன்ஜின் வேலை, லேத் வேலை, பெயிண்டிங், நிக்கல், பபரிங் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் செய்து தருகிறோம். இதனால் ஆந்திரா, கேரளா, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் இங்கு வண்டிகள் வரும். கம்பெனி சர்வீஸ் சரியில்லை என நம்மிடம்தான் வண்டியை விடுவாங்க. மிகச் சிறப்பாக சரி செய்து கொடுப்போம் எனத் தொடங்கினார் ஜான்சன். மேலும், எங்களப் போன்ற தொழிலாளிகளுக்கு வீடு கட்ட இடம் தர்ரேன்னாங்க. சிறு தொழில் மையம் அமைச்சு தருகிறோம்னாங்க. தொழில் செய்ய லோன் தருவாங்கனு சொன்னாங்க. ஆதார் கார்டு, பேன் கார்டு எடுத்துக்கிட்டு ஸ்டேட் பேங்க்கு போனேன். போய் உங்க ஏரியா கவுன்சிலர பாருன்னுட்டாங்க. முத்ரா திட்டத்தில கடன் கேட்டேன். ஒன்னும் நடக்கல. தனியா கடை வச்சிருந்தேன். மோடி அரசின் சட்டம், வரி, மசோதாவால எல்லா தொழிலும் முடங்கிப் போச்சு. 6500 ரூபா வாடகை, 10, 7ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகள். சமாளிக்க முடியல. நானும் கடைய நடத்த முடியாம அத மூடிட்டு இங்க கூலிக்கு வந்து விட்டேன் என்கிறார் ஜான்சன். 5 வருசத்துக்கு முன்னாடி புதிய இந்தியா, நல்ல காலம் பொறக்கும்னு ஆசைய தூண்டி எல்லாரையும் ஏமாத்திட்டாங்க. ஆனா, அவங்க சொன்ன மாதிரி ஒன்னுமே நடக்கல. கண்டிப்பா மாறுதல் வந்தா தான் பிழைக்க முடியும் என்கிறார் பாலகுமார்.-சக்திவேல்.