நாமக்கல், மே 8-விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டாரத்தில் விசைத்தறி தொழிலில் பணிபுரியும் ஆண், பெண் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் கூலி உயர்வு வழங்கவேண்டும். வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வந்த தொழிற்சங்க தலைவர்கள் மீதுபோடப்பட்ட பொய் வழக்கை வாபஸ்பெறவேண்டும். விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக பேசி தீர்வு காணவேண்டும். கூலி உயர்வுக்காக போராடும் விசைத்தறி தொழிலாளர்களை பழி வாங்காமல் ஏறிவரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று ராஜன் தியேட்டர் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமாரபாளையம் நகர குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியசெயலாளர் எம்.ஆர்.முருகேசன் முன்னிலைவகித்தார். கட்சியின் மாநில செயற்குழுஉறுப்பினர் கே.தங்கவேல் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, விசைத்தறி தொழிலாளர் சங்க நகர கமிட்டி உறுப்பினர் ஜி.மோகன் உட்பட விசைத்தறி தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.