பலத்த சூறாவளி காற்றினால் மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு
கூடலூர், மே 7-பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் கூடலூர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கூடலூர், முதுமலை அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்று, இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திங்களன்றுமசினகுடி மாவனல்லா பகுதியிலும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மரக்கிளைகள் முறிந்து மாவனல்லா - உதகை சாலையில் விழுந்தன. மேலும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்ததில் மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மாவனல்லா, கூடலூர், அத்திக்கடவு உட்பட கூட்டு குடியிருப்பு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரைகள் சூறாவளி காற்றில் பறந்தன. மேலும் மின் விநியோகமும் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
காவிரியில் மூழ்கி சிறுவன் பலி
ஈரோடு, மே 7-ஈரோடு மாவட்டம் கரூர் சாலை அன்பு நகரைச் சேர்ந்தவர் அரசு பேருந்து நடத்துநர் பாஸ்கரன். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களின் மகன் திணேஷ்குமார் (17). பனிரெண்டாம் வகுப்பு முடித்துகோடை விடுமுறையில் கொடுமுடி அருகே தாமரைப்பாளையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு பெரியப்பா சந்திரசேகரன், அவரது மகன் சசிகுமார், பெரியம்மா ஈஸ்வரி ஆகியோருடன் ஊஞ்சலூர் அருகே காவிரி ஆற்றில் தடுப்பணை அமைந்துள்ள பகுதியில் குளிக்கச் சென்றுள்ளார். ஆழமான பகுதியை அறியாமல் குளித்துக் கொண்டிருந்த தினேஷ்குமார் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி இறந்துள்ளார். இதுகுறித்துகாவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.