திருப்பூர், ஏப். 11 -பல்லடம் மின் மயானம் கட்டுமானப் பணியை நிறுத்தியதற்குஎதிர்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை பல்லடம் நகரப்பகுதியில் முழு கடையடைப்புப் போராட்டம்நடைபெற்றது. இப்போராட்டத்தின்போது பேருந்து மீது மர்ம நபர்கல்லை வீசிவிட்டுத் தப்பிச் சென்றார்.பல்லடம், கரடிவாவி, அனுப்பட்டி, சித்தம்பலம், வடுகபாளையம்புதூர், பணிக்கம்பட்டி, சின்னியக்கவுண்டம்பாளையம், காரணம்பேட்டை, லட்சுமி மில், கணபதிபாளையம், செல்லப்பம்பாளையம் என பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்களுக்குப் பயன்படும் வகையில், பொள்ளாச்சி சாலைபனிக்கம்பட்டி ஊராட்சி வெங்கிட்டாபுரத்தில் 2 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. ரூ.3 கோடி செலவில் கடந்த ஓராண்டாக கட்டிடப்பணிகள் நடந்துவந்தது. 30 சதவிகித கட்டுமானப் பணிகள் முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது மின்மயான கட்டிடப் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. வட்டார வளர்ச்சி அலுவலர் தன்னிச்சையாக இப்பணியை நிறுத்த உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.போராட்டம்எனவே கட்டிடப் பணியை நிறுத்திய அரசு அலுவலர்களை பணி நீக்கம் செய்யவும், உடனடியாக மின் மயானக் கட்டிடப்பணியை மேற்கொள்ளவும் வலியுறுத்தி வியாழனன்று பல்லடத்தில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் சமூக ஆர்வலர் குழுவினர் கூறினர்.இப்போராட்டத்தால் பல்லடம் தினசரி சந்தை, என்.ஜி.ஆர் சாலை, பேருந்து நிலையம், மாணிக்காபுரம் சாலை, மங்கலம் சாலை, அருள்புரம், மகாலெட்சுமி நகர், ராயர்பாளையம், பனப்பாளையம், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் 2500 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
பேருந்து கண்ணாடி உடைப்பு
கடையடைப்பு நடைபெற்ற நிலையில் மதுரையில் இருந்து கோவை நோக்கி அரசுப் பேருந்து பல்லடம் வழியாகச் சென்று கொண்டிருந்தது. பேருந்தை சிவா என்ற ஓட்டுநர் ஓட்டிவந்தார். பல்லடம் அருகே ராஜீவ் காலனி பகுதியில் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திடீரென தனது கையில் இருந்த கல்லை பேருந்து மீது வீசிவிட்டு தப்பிச் சென்றார். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. ஓட்டுநருக்கும், பேருந்தில் இருந்த பெண் ஒருவருக்கும் லேசானகாயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பல்லடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பேச்சுவார்த்தை
இந்த போராட்டத்தை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தைநடந்தது. இதில் பல்லடம் பகுதியைச் சேர்ந்த போராட்டக்குழு நிர்வாகிகள் பங்கேற்றனர். பல்லடம் ரோட்டரி சங்கம் மூலம் நகர்ஊரமைப்புத் துறை திருப்பூர் மண்டல இயக்குநருக்கு வரைபட அனுமதி பெற அனுப்பப்பட்டுள்ளது. வரைபட அனுமதி பெறப்பட்டு வெங்கிட்டாபுரம் மின்மயானப் பணியை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. சில தினங்களில் ஊரமைப்பு திட்டத்தின் அனுமதி பெறப்பட்டு விரைவில் பணியை தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அக்குழுவினர் தெரிவித்தனர்.