tamilnadu

img

பந்தயக் குதிரைகள்!

பத்மாவுக்கு காலையிலிருந்தே படபடப்பாக இருந்தது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்னும் சிறிது நேரத்தில் அறிவித்து விடுவார்கள்.  மகள் ஜானு என்ன மார்க் வாங்கப் போகிறாளோ...என மூளை சூடாகிக் கொண்டே போனதில், பத்மாவின் ரவுக்கை வியர்வையில் நனைந்தது.

முடிவு தெரிந்துவிட்டது. ஜானு முன்னூற்று இருபது மார்க் வாங்கி இருந்தாள். பத்மா அதிர்ச்சியில் மூர்ச்சையாகி விடுவாள் போலிருந்தது. “நானூறு மார்க்காவது வாங்க வேண்டாமா... எந்தலையில இப்படி கல்லை போட்டிட்டுயேடி பாவி” என மூச்சு வாங்க அழ ஆரம்பித்தாள். அம்மாவை ஏமாற்றி விட்டோமே என்ற ஆதங்கத்திலும், அவமானத்திலும் ஜானுவுக்கு உயிர் போவது போலிருந்தது.

வெளியில் எப்படி தலைகாட்டுவது என பத்மா கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்த பொழுது, வீட்டுக்கதவு தட்டப்பட்டது. பத்மா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தாள். கணவன் கிருஷ்ணன் உற்சாத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான்.  “ஜானு நீ பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ணிட்ட என மகளைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கூறியவாறு கையிலிருந்த சாக்லெட் பாக்ஸை ஜானுவிடம் கொடுத்தான். அப்பாவின் முகத்தில் மலர்ந்திருந்த மகிழ்ச்சி ஜானுவின் முகத்திலும் பூக்க ஆரம்பித்தது.

 “அவ வாங்கியிருக்கிற மார்க்குக்கு சாக்லெட் ஒன்னுதான் குறைச்சல்” என பத்மா எரிந்து விழுந்தாள். கிருஷ்ணன், “ஜானு என்ன, நீ பந்தயம் கட்டிய குதிரையா, மார்க்கை வைத்து மகளின் அறிவை எடை போடாதே பத்மா” என அமைதியாக கூறியவன், ஜானுவின் தோளை தட்டிக் கொடுத்து, “நீ போம்மா, போயி எல்லாருக்கும் சாக்லெட் கொடு...” என்று சொன்னான். ஜானு, படிகளில் துள்ளி குதித்து, சாக்லெட் பாக்சுடன் பக்கத்து வீடுகளுக்கு ஓடினாள்.