இயற்கை மருத்துவ குணம்கொண்ட பனை மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் அதுவும் தென்மாவட்டங்களில் பண்டைய காலத்திலிருந்து பனை மரங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுவந்தன. இந்த பனை மரங்களிலிருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, பனகிழங்கு போன்றவை உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருவதாக உள்ளன. அதோடு பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரை காய்சி கர்ப்பட்டி, பனகற்கண்டு ஆகியவையும் தயாரிக்கப்படுகின்றன.இவைகள் அனைத்தும் உடலுக்கு வலுசேர்ந்து நீண்ட ஆயுளை தருவதாக உள்ளன. அதுமட்டுமல்லாமல் நம் முன்னோர்கள் பனைமரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களை சாப்பிட்டு திடகாத்திரமாக வயல்வெளிகளில் வேலை பார்த்து வந்தனர். கூரைவீடுகள் மற்றும் ஓட்டு வீடுகள் கட்டுவதற்கும்கூட பனை மரங்களை மக்கள் பயன்படுத்தி வந்தனர். முதிர்ந்த பனை மட்டைகளை வீடு மற்றும் கொள்ளைபுறங்களை பாதுகாக்க வேலியாகவும் பயன்படுத்தி வந்தனர். மேலும் ஆறு குளங்களின் கரைகள் வலுப்பெற பனைகுட்டைகளை விதைத்து நீர்நிலைகளை பாதுகாத்து வந்தனர் நம் முன்னோர்கள்.இவ்வாறு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய பனைமரங்களை தற்போது செங்கல் சூலைக்குள் அடுப்பு எரிக்க பயன்படுத்துவதற்காக பெருமளவில் வெட்டப்படுகின்றன. இதனால் நீண்டகாலம் ஆயுளுடன் இருக்கும் இந்த மரங்கள் வெகுவாக குறைந்து வருகின்றன. சில இடங்களில் விவசாயிகள் பனை மரத்தால் ஏற்படும் நன்மைகள் கருதி அதனை பாதுகாத்து வளர்ந்து வருகின்றனர். கோடை காலங்களில் விவசாய தொழிலாளர்கள், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் சாலையோரங்களில் உள்ள பனை மரங்களில் உற்பத்தியாகும் நுங்கு விற்பனை செய்து வருகின்றனர்.
கோடை காலங்களில் இளநீரை விட குளிர்ச்சி தரும் நுங்கை ஆர்வத்துடன் மக்கள் வாங்கி செல்கின்றனர். பல இடங்களில் வீட்டின் தோட்டத்தில் பனை கொட்டைகளை விதைத்து அது வளர்ந்து பனங் கிழங்காக விற்பனை செய்வதும், பனை தோப்புகளை உருவாக்கும் பணிகளிலும் விவசாய தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இதை பாதுகாப்பதற்கு தண்ணீர் ஊற்றுவதோ, வேலியமைத்து பாதுகாப்பதோ தேவையில்லை. தானாகவே வளர்ந்து பொதுமக்களுக்கு பயன்தரும் முக்கியத்துவம் வாய்ந்த மரமாக இது உள்ளது. வீட்டுக்கு ஒருவர் பனங்கன்றை விதைப்பு செய்தால் அது நமது குழந்தைகளுக்கும் பயன்தரும். கடந்த 2018 நவம்பர்-15 அன்று நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை கஜா புயல் தாக்கியபோது தென்னை மரங்கள் மற்றும் இதர மரங்கள் 5 லட்சத்திற்கும் மேல் அழிந்துவிட்டன. இதில் எந்த இடத்திலும் பனை மரங்கள் புயல் பாதிப்பில் சாய்ந்து அழிந்ததாக தகவல் இல்லை. அந்தளவிற்கு பனை மரத்தின் தன்மையும் அதனுடைய வலுவும் மற்ற மரங்களை விட பாதுகாப்பு அரண்கொண்டதாகவே உள்ளன. இந்நிலையில் இந்த இயற்கை மருத்துவ குணம்கொண்ட பனை மரங்களை உரிய முறையில் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர். அதை செய்வதற்கு அரசு முன்வருமா என்பதுதான் நமக்குள்ள கேள்வி.