tamilnadu

img

நவ.27-ல் புதுச்சேரியில் ‘பந்த்’

அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் முடிவு

புதுச்சேரி, நவ. 8- அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றக் கோரி அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில்  நவம்பர் 27 அன்று புதுச்சேரியில் ‘பந்த்’ போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுநர், தையல் கலைஞர்கள், கடை ஊழியர்கள் உள்ளிட்ட 27 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ள அமைப்புசார தொழிலாளர்கள், புதுச்சேரி அமைப்பு சாரா நலச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இத்தொழிலாளர் களுக்கு ஒரு சில திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களைப் போல் நலவாரியம் ஏற்படுத்த வேண்டும் என்று சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் அரசை வலியுறுத்தி வருகின்றன.  புதுச்சேரி முதலியார்பேட்டையில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு பிரதேசத் தலைவர் கே.முருகன் தலைமை தாங்கினார். ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சேதுசெல்வம், ஐஎன்டியூசி நிர்வாகி ஞானசேகரன், ஏஐசிசிடியூ செயலாளர் மோதிலால், எல்எல்எப் நிர்வாகி செந்தில், புதுச்சேரி மாநில ஆட்டோ சங்க நிர்வாகி மணிவண்ணன். எல்பிஎப் நிர்வாகி விமல், ஏடியூ சங்க நிர்வாகி  கண்ணன், சலவையாளர் சங்கத் தலைவர்  பெருமாள், சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகி வடிவேல், தையல் கலைஞர்கள் சங்க தலைவர்  தியாகராஜன், சிஐடியு  பிரதேச செயலாளர் சீனுவாசன், நிர்வாகிகள் பிரபுராஜ், மதிவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம் மாதம் 27ஆம் தேதி அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் பந்த் போராட்டம்  நடத்துவது என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  பந்த் போராட்டத்திற்கு புதுச்சேரி கடைவியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களும் ஆதரவு தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.