அவிநாசி, ஏப்.25- அவிநாசி அடுத்த கருமாபாளையத்தில், தனியார் ஒருவர் இடம் விற்பனை செய்துள்ளார். இதில் பாதைக்கான இடத்தை வழங்க மறுத்து வருவதால், மாவட்ட நிர்வாகம் தலையீடு செய்து சாலை, சாக்கடை வசதிகள் ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கருமாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட தண்ணீர் பந்தல் பேருந்து நிலையம் அருகில் வெங்கடாசலம் என்பவர் 2005ஆம் ஆண்டு 80 செண்டு இடத்தை பலருக்கு விற்பனை செய்துள்ளார். இதையடுத்து 10க்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் கட்டி குடியேறி உள்ளனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாக்கடை, சாலை வசதி கேட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் மனு அளித்தனர். இப்பகுதியை ஆய்வு செய்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இடம் விற்பனை செய்தவர் 30 அடி சாலைக்கான இடத்தை ஒப்படைக்காமல் உள்ளார் என பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதி குடியிருப்பு வாசிகள் வீட்டு மனை விற்பனை செய்த வெங்கடாசலத்திடம் 30 அடி சாலைக்கான இடத்தை ஒப்படைக்குமாறு வலியுறுத்தினர். ஆனால் அவர் சாலைக்கான இடத்தை ஒப்படைக்க மறுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் சாலை,சாக்கடை வசதி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். இதையறிந்த வெங்கடாசலம், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த 30 அடி சாலையை மறைத்து வேலி அமைத்துவிட்டார். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வேலினை அப்புறப்படுத்தினர். தற்போது பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சாக்கடை, தார் சாலை வசதியின்றி உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையீடு செய்து சாக்கடை, சாலை வசதி செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.