tamilnadu

முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.50.60 கோடி நிலுவை

திருப்பூர், ஏப். 23 -தமிழகத்தில் முறைசாராத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து விண்ணப்பித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்ட 46 ஆயிரம் உறுப்பினர்களுக்கு கடந்த 11 மாதங்களாக மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.1000 வழங்கப்படவில்லை. இதன்படி மொத்தம் ரூ.50 கோடியே 60 லட்சம் நிலுவையாக உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விசயத்தில் கவனம் செலுத்தி நிராதரவான அந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு நிலுவை ஓய்வூதியத் தொகையை வழங்குவாரா என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர்.தமிழகத்தில் கட்டுமானம், ஆட்டோ, தையல், விசைத்தறி என பல்வேறு முறைசாரா தொழில்களில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நலவாரியங்கள் மூலம் விபத்து மற்றும் இயற்கை மரணம் இழப்பீடு, குழந்தைகள் கல்வி உதவி, மருத்துவ உதவி மற்றும் ஓய்வூதியம் என பல்வேறு நலத்திட்டங்கள் உள்ளன.முறைசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பெயர்ப் பதிவு செய்து, நலத் திட்டங்களுக்கு விண்ணப்பித்தாலும் ஏராளமான கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்படாமலும், உதவித் தொகைகள் தரப்படாமலும் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. அத்துடன் நலவாரிய செயல்பாட்டையும் அதிமுக அரசு முடக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில் முறைசாரா தொழில்களில் வேலை செய்து 60 வயது பூர்த்தி ஆனவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000 வீதம் வழங்கும் திட்டம் முறைசாரா தொழிலாளர் நலவாரியத்தில் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஓய்வூதியத் திட்டத்திலும் பல ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் குறிப்பாக 46 ஆயிரம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு ஏற்கெனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது. எனினும் கடந்த நிதியாண்டு தொடக்கத்தில் இருந்து 11 மாதங்களாக 46 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டிய மாதாந்திர ஓய்வூதியம் தலா ரூ.1000 வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.இது தொடர்பாக சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் நலவாரிய அலுவலகங்களையும், அரசு நிர்வாகத்தையும் அணுகி ஓய்வூதிய நிலுவையை உடனடியாக வழங்கும்படி கோரிக்கை எழுப்பி வருகின்றனர். ஆனால் 46 ஆயிரம் பேருக்கு மாதம் வழங்க வேண்டிய ஓய்வூதியத் தொகை மொத்தம் ரூ.4 கோடியே 60 லட்சம் வீதம் 11 மாதங்களுக்கு ரூ.50 கோடியே 60 லட்சம் இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கிறது.


முறைசாரா தொழிலாளர்கள் பல்வேறு கடுமையான உடலுழைப்புத் தொழில்களில் ஈடுபட்டவர்கள், 60 வயதைக் கடந்த நிலையில் உடல் நிலை தளர்ந்தும், பெரும்பாலும் வறுமையான சூழலிலும் வாழக்கூடியவர்களாக இருக்கின்றனர். இவர்களது மருத்துவம் உள்ளிட்ட முக்கியமான தேவைகளுக்கு இந்த ஓய்வூதியத் தொகையே ஜீவாதாரமாக உள்ளது. ஆனால் தமிழக அரசு இத்தொகையை விடுவிப்பதில் தேவையற்ற காலதாமதம் செய்கிறது என்று தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இது பற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டால் உடனடியாக இந்த பணம் தொழிலாளர் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.ஐஎன்டியுசி முறைசாரா தொழிலாளர் சங்கச் செயலாளர் அ.சிவசாமி கூறுகையில், தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் பழனிச்சாமி நான் விவசாயியின் மகன், ஏழை, எளிய மக்களுக்காக ஆட்சி நடத்துகிறேன் என்று கூறி வாக்கு கேட்டார். குறிப்பாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை திமுக தடுப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். ஆனால் முறைப்படி அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்னரும் 46 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 11 மாதங்களாக வழங்க வேண்டிய ரூ.50.60 கோடி ஓய்வூதியத் தொகையை வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.இனியும் காலம் தாழ்த்தாமல் 46 ஆயிரம் தொழிலாளர்களுக்கு உரிய ஓய்வூதியத் தொகையை நிலுவையுடன் சேர்த்து வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.