தாராபுரம், ஏப்.24 -தாராபுரம் அருகே அதிகவெடி சப்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் பலியாகின.தாராபுரம் அருகே உள்ள ராம்நகரில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதில் செவ்வாயன்று இரவில் தீர்த்தம் கொண்டு வந்த பக்தர்கள் வெடி வெடித்து கொண்டு வந்தனர். இதில்அதிகளவில் சப்தம் கொண்ட வெடிகளை வெடிக்க வேண்டாம் என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் விழா குழுவினரிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் தொடர்ந்து இரவு நேரத்தில் அதிகளவு சப்தம் கொண்ட வெடிகளை வெடித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கோழிப்பண்ணை நடத்திவரும் அர்ஜுனன் என்பவரது பண்ணையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துவிட்டதாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அர்ஜுனன் கூறுகையில், நத்தப்பாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணை நிறுவனத்திடம் இருந்து 5ஆயிரம் கோழிகளை வாங்கி கமிஷன் முறையில் வளர்த்து கொடுத்து வருகிறேன். செவ்வாயன்று கோவில் திருவிழாவின்போது அதிக சப்தம் கொண்ட வெடி வெடித்தால் பண்ணையில் இருந்த கோழிகள் பயந்து நடுங்கியது. இதுகுறித்து விழாக்குழுவிடம் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. தொடர்ந்து வெடித்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துவிட்டது. மேலும் கோழிகள் பயந்து அங்கும் இங்கும் ஓடியதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் காயமடைந்து இறந்துவிடும் தறுவாயில் உள்ளன. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இறந்தகோழிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.