tamilnadu

ஈரோடு முக்கிய செய்திகள்

ஓய்வின்றி ஒலிக்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி புகார்களால் திணறும் ஊழியர்கள்


ஈரோடு, ஏப்.17-பணப்பட்டுவாடா தொடர்பாக, கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டுள்ளதால் ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்ட மன்ற தொகுதிகளில், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாகவும், வாக்காளர்களுக்கு இலவசமாக பொருட்கள் வழங்குவது மற்றும் பணம் விநியோகம் செய்வது தொடர்பாகவும் பொதுமக்கள் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இலவச தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இலவச தொலைபேசி சேவை தொடங்கப்பட்ட உடனே சுவற்றில் சின்னங்கள் இருப்பது குறித்தும், கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் இருப்பது குறித்து மட்டுமே புகார்கள் வந்து கொண்டிருந்தன. புகார் பதிவு செய்யப்பட்ட உடன் சம்பந்தப்பட்ட பகுதியின் பறக்கும் படை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.இதில், பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வந்து கொண்டுள்ளது. இது குறித்து அப்பகுதியில் உள்ள பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, உடனடியாக அப்பகுதியில் பறக்கும் படையினர் விரைந்து வருவதை அறிந்த ஆளுங்கட்சியினர் இடத்தை காலி செய்து விட்டு சென்று விடுகின்றனர் என அதிகாரிகளே கூறுகின்றனர்.


மலைக்கிராமத்தில் வாக்களிக்க 15 கிலோ மீட்டர் நடைப்பயணம்


பழங்குடி மக்கள் வேதனை


ஈரோடு, ஏப்.17-கோபி அருகே உள்ள விலாங்கொடை மலைக்கிராமம். இக்கிராமத்தில் நீராடிய மற்றும் பழங்குடியினர் 45 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வசித்து வருகின்றனர். இங்கு 120 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்குகளை அளிக்க 15 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப் பகுதியில், யானைகளின் நடமாட்டத்திற்கு இடையே நடந்து சென்று கொங்கர்பாளையம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.முன்னதாக விலாங்கோம்பை கிரமத்திலேயே வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்று கடந்த தேர்தலின் போது கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால் இந்த தேர்தலிலும் 15 கி.மீ தூரம் நடந்து சென்று வாக்களிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.இது குறித்து பழங்குடியின மக்கள் கூறுகையில், எங்கள் ஊர் பகுதியில் 120 வாக்காளர்கள் உள்ளோம். எங்கள் பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்று கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வலியுறுத்தியிருந்தோம். அடுத்த தேர்தலில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்த அதிகாரிகள் இந்த தேர்தலிலும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில் யானைகள் நடமாட்டம் உள்ள அடைந்த வனப்பகுதியில் 15 கி.மீ. நடந்து சென்று வாக்களிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். அடர்ந்த வனப்பகுதி என்பதால் போக்குவரத்து வசதி எதுவும் கிடையாது. மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏதாவது வாகன வசதி செய்து கொடுத்தால்தான் வாக்களிப்பது சாத்தியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.