tamilnadu

மதுபான விற்பனை சரிவு: டாஸ்மாக் ஊழியர்களுக்கு நெருக்கடி தரும் அதிகாரிகள்

கோவை, ஜூன் 4– மதுபான விற்பனையை அதிகரிக்க டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகாரிகள் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர். இது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் டாஸ்மாக்மதுபானக்கடை மேற்பார்வையாளர்கள் கூட்டம் பீளமேட்டில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டு மே மாதத்தை விட இந்த ஆண்டு மே மாதம் டாஸ்மாக்கில் மதுபானை விற்பனை குறைந்துள்ளது தொடர்பாகவும், விற்பனை சரிவிற்கான காரணத்தை கேட்டும் கோவை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனையடுத்து கூட்டத்தில் பேசியமதுபான கடை மேற்பார்வையாளர்கள், பள்ளிகள் திறக்கும் காலம் என்பதால் கல்வி செலவு அதிகரிப்பு காரணமாக மதுப்பிரியர்களின் வருகை குறைந்துள்ளதாகவும், சமீபகாலமாக தொழில் மந்தம் காரணமாகவும் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், டாஸ்மாக் மதுக்கடை திறந்திருக்கும் நேரம் தவிர மற்றநேரங்கள் அனைத்திலும் பார்களில்கள்ளத்தனமாக மதுபானம் விற்கப்படுகிறது. இதில் டாஸ்மாக்மதுபானத்தோடு போலி மதுவகைகளும் கலந்து விற்கப்படுகிறது. இதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகத்தில் போதிய ஏற்பாடுகள் இல்லை. அதுவும், ஆளும்கட்சியினரே இந்த பார்களை நடத்துவதால் அவர்களை கேள்வி கேட்க முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்கிற அடுக்கடுக்கான காரணத்தை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால்இந்த காரணங்களை ஏற்காத அதிகாரிகள் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட வேண்டும். அதற்கு என்னசெய்ய முடியுமோ அதை செய்யுங்கள் அல்லது வேலையை விட்டுபோய்விடுங்கள் என்று மிக கடுமையாக பேசியுள்ளனர். இந்நிலையில் செவ்வாயன்று மதுபான கடையின் விற்பனையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் டாஸ்மாக் மேலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் விற்பனை சரிந்த 85 டாஸ்மாக் கடைகளின் விற்பனையாளர்களை அழைத்துள்ளனர். இதில் 40 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இக்கூட்டத்திலும் வருவாய் அதிகரிப்பிற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், மதுபான விற்பனை சரிந்துள்ளது உண்மைதான். நாடாளுமன்ற மற்றும் சூலூர்சட்டமன்ற இடைத்தேர்தலின்போது தேர்தல் ஆணையம் காட்டிய கெடுபடியாலும், காவல்துறையினர் இரவு பகல் பார்க்காமல் டிரிங்க் அன் டிரைவ் அபராதம் போடுவதால்விற்பனை குறைந்துள்ளதாக அதிகாரிகளிடம் தெரிவித்தோம். மேலும் மலிவு விலை மதுபானங்கள் உரிய சப்ளை இல்லாததால் கூடுதலாக விலை கொடுத்து மதுபானங்களை வாங்க வேண்டியுள்ளதால் பாட்டிலின் எண்ணிக்கை குறைந்துள்ளதே தவிர வருவாய்20 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளதாக தெரிவித்தோம். ஆனால், இதற்கு அதிகாரிகள் வருவாய் இழப்பை ஜூன் மாத விற்பனையில் ஈடுகட்ட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். இவ்வாறு அதிகாரிகளின் நிர்பந்தம் செய்தால்ரோட்டில் செல்பவர்களை கையைபிடித்து இழுத்து வந்தா குடிக்கவைக்க முடியும் என வேண்டும்என்று தனது ஆதங்கத்தை ஆவேசமாக தெரிவித்தனர். (ந.நி)