tamilnadu

img

கோவை: தனியார் கல்லூரி மாணவி படுகொலை

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பான அதிர்ச்சியில் இருந்தே தமிழகம் மீளாத சூழலில் தற்போது மேலும் ஒரு கல்லூரி மாணவி அரை நிர்வாணக் கோலத்தில் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம், அருகே உள்ள ராகவநாயக்கன் பட்டியைச் சேர்ந்த தம்பதியின் மகள் கோவையில் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரியில் படித்து வந்த மாணவிக்கும் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் வரும் ஜூன் 13-ம்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் அந்த மாணவி வெள்ளியன்று கல்லூரி விடுதியிலிருந்து வீட்டுக்குக் கிளம்பியுள்ளார். ஆனால், மாணவி வீட்டுக்கு வரவில்லை. செல்போனில் மாணவியின் பெற்றோர் தொடர்பு கொண்டபோது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திலும் கோவை காட்டூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

இதையடுத்து 24 மணி நேரத்தில் பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் பூசாரிப்பட்டி அருகே இளம்பெண்ணின் சடலம் சாலையோரத்தில் கிடப்பதாக கோமங்கலம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்றதில் மாணவியின் உடலில் காயங்களும், கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டதால் ரத்தம் வெளியேறி உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.

அவர் உடல் ஆடைகள் கலைந்து,அரை நிர்வாணக் கோலத்தில் கிடந்தது. உடலைப் பார்த்த போலீஸாருக்கு யார் என அடையாளம் தெரியவில்லை. அப்போது அவ்வழியே வந்த ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளார். போலீஸார் விவரம் கேட்டபோது இது தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் மாணவி, விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்று கூறியுள்ளார்.

உடனடியாக போலீஸார் மாணவியின் பெற்றோர் எண்ணை வாங்கி விவரம் தெரிவித்தனர். இதையடுத்து உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவி ஹாஸ்டலிலிருந்து புறப்பட்ட சில மணி நேரங்களில் காணாமல் போயிருக்கிறார். மறுநாள் மாலை பிணமாக மீட்கப்பட்டிருக்கிறார். ஆனால் மாணவி அணிந்திருந்த நகைகள் எதுவும் திருடப்படவில்லை

இந்நிலையில் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி பின்னர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து இன்று மாணவியின் உடல் பிரேதப்பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.