நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை
உதகை, மே 21-வாக்கு எண்ணும் நாளான மே 23ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா விடுத்த செய்திக்குறிப்பில், நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் நாளான வியாழனன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் விதிகள்-2003ன்படி வெளிநாட்டு மதுக்கடைகள், டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், கிளப், பார்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி மதுக்கடை திறந்திருப்பதாக தகவல் தெரிந்தால், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் 0423 2234211, கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் 0423 2223802, உதவி ஆணையர்(ஆயம்) அலுவலகம் 0423 2443693 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.
சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு
கோவை, மே 21–மேட்டுப்பாளையம் அருகே திங்களன்று நடைபெற்ற சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த முருகேசன்மகன் பாலகிருஷ்ணன்(20). அதே பகுதியை சேர்ந்தவர் மதுரைவீரனஜன் மகன் ஸ்ரீகாந்த்(17). இவர்கள்இருவரும் நண்பர்கள். பாலகிருஷ்ணன் சில மாதங்களுக்கு முன்னர் புதியதாக இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார். அந்த வாகனத்துக்கு மாத தவணை தொகையை செலுத்த நண்பர் ஸ்ரீகாந்துடன் மேட்டுப்பாளையத்துக்கு வந்தார். அங்குள்ள நிதி நிறுவனத்தில் பணத்தை செலுத்திவிட்டு, மீண்டும் குன்னூர் நோக்கி புறப்பட்டனர். மேட்டுப்பாளையம் 2-வது பாலம் அருகே உள்ள கன்னிமார் கோவில் அருகே வந்த போது, எதிரே வந்தபேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியது. மோதியவேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டனர். சாலையில் கிடந்த இளைஞர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாகஉயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.