தருமபுரி, மே 9-தருமபுரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளில் 87.50 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் 101 அரசு பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 766 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதினார்கள். இவர்களில் 10 ஆயிரத்து 295 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி 87.50 சதவிகிதம் ஆகும். கடந்த ஆண்டு இந்த மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை எழுதிய அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளில் 87.32 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் பிளஸ்-1 தேர்ச்சி 0.18 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் பிளஸ்-1 தேர்ச்சி சதவிகித அடிப்படையில் தருமபுரி மாவட்டம் மாநில அளவில் 28 வது இடத்தை பிடித்து உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் பள்ளிகள் வாரியாக அரசு பள்ளிகள் 87.50 சதவிகித தேர்ச்சியையும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் 91.67 சதவிகித தேர்ச்சியையும், பழங்குடியினர் பள்ளிகள் 84.85 சதவிகித தேர்ச்சியையும் பெற்று உள்ளன.அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.05 சதவிகித தேர்ச்சியையும், சுயநிதி பள்ளிகள் 99.30 சதவிகித தேர்ச்சியையும், மெட்ரிக் பள்ளிகள் 98.51 சதவிகித தேர்ச்சியையும் பெற்று உள்ளன. மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார்பள்ளிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி 91.51 சதவிகிதமாகும்.