கோயம்புத்தூர் தொழில்துறை உள்கட்டமைப்பு சங்க(கோஇன்டியா) அமைப்பானது கோவை தெற்கில்-கள்ளப்பாளையம், கிழக்கு-அரசூரிலும், வடக்கு-மாணிக்கம்பாளையம் பகுதியில் பவுண்டரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கிளஸ்டர் அமைத்து இயங்கிவருகிறது. இவ்வமைப்பின் தலைவரும், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கத்தின் (சீமா) தலைவருமான எஸ்.குப்புசாமியை சந்தித்து தொழில் நிலைமை உள்ளிட்டவைகள் குறித்து பேசுகையில் அவர் கூறியதாவது,பவுண்டரி தொழிலுக்கு கடந்த ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் டிமாண்ட் இருந்தது. ஒவ்வொரு பொருளுக்கும் 3லிருந்து 4 மடங்கு தேவை இருந்தது. இதனால் ஒவ்வொரு சப்ளையரும் அதற்குத் தேவையான அளவிற்கு கட்டமைப்புகளை மேம்படுத்தினர். இந்நிலையில் கடந்த சில மாதங்களில் அனைத்தும் திடீரென நின்று விட்டன. 2 ஆண்டுகளுக்கு முன் 4 சப்ளையர்கள் இருந்த இடங்களில் தற்போது ஓரிருவர் மட்மே உள்ளனர். பயன்படுத்தி விட்டு தூக்கி எறிவது போல அவர்கள் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பாதிப்பிலிருந்து விடுபட வருடத்திற்கு இவ்வளவு பொருள் வேண்டும். மாதா, மாதம் இவ்வளவு வாங்குவோம் என கொள்முதல் ஆணை வெளியிட்டால் சப்ளையர்களுக்கு பிரச்சனை இருக்காது. இதுதான் இன்றைக்கு கோயம்புத்தூரின் தொழில் நிலவரமாக இருக்கிறது.
மாசுக்கட்டுப்பாடு
மாசு என்பது நமது நாட்டில் மிகப் பெரிய பிரச்சனையாகி வருகிறது. கோயம்புத்தூரில் பவுண்டரி தொழிலிலும் மாசு உள்ளது. பவுன்டரி தொழில் கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைப்பது பற்றி இந்திய வார்பட சங்கம் சார்பாக அரசாங்கத்திடம் விளக்கியுள்ளோம். அரசே தானாக முன்வந்து மறு சுழற்சி மையம் அமைத்து அங்கு பவுன்டரி கழிவுகளை மறு சுழற்சி செய்வதோடு அதிலிருந்து வெளியேறும் கழிவுகளை சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். வளர்ந்த நாடுகளில் பழைய வாகனங்களை உடைத்து மறு பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் சட்டங்கள் உள்ளன. இங்கு அது போன்றுஎதுவும் இல்லை. 25 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை கண்டிப்பாக உடைக்க வேண்டும். அப்படி செய்யும்போது அதற்காகவே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகும். அப்போது சந்தையில் இதற்கான தேவை இருக்கும். அப்போது புதிய மூலப் பொருட்களின் தேவை குறையும். இதனால் கனிம வளம் சுரண்டப்படுவது கணிசமாகக் குறைவதோடு, பழைய வாகனங்களால் மாசு ஏற்படுவதையும் தடுக்க முடியும்.
வார்ப்புகள்(கேஸ்டிங்கஸ்)
கோயம்புத்தூரில் நிறைய வார்ப்புகள் உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். வெளிநாடுகளில் உள்ள தரத்தைநம்மிடமும் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் கட்டமைப்புகள் வேறு, நம் கட்டமைப்புகள் வேறு. எனினும் அங்கே விற்கும் விலையை விட (25 விழுக்காடு) குறைவாக இருந்தால் தான் வாங்குகின்றனர். அதற்கேற்ப இங்குள்ள கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் உற்பத்தியும் அதிகரிக்கும்.
இன்சென்டிவ் (டியூட்டி டிரா பேக்)
ஒரு பொருளை ஏற்றுமதிசெய்யும்போது அரசாங்கத்திடமிருந்து இன்சென்டிவ் என்ற பெயரில் வரி சலுகை வழங்கப்பட்டது. கடந்த காலங்களில் 12 விழுக்காடு வரை வரி சலுகை வழங்கினர். இது தற்போது 2 விழுக்காடாகக் குறைத்துள்ளனர். வெறும் 2 சதவிகிதம் மட்டுமே வரி சலுகை வழங்கப்படுகிறது. அதேநேரம், அண்டை நாடானசீனாவில் ஏகப்பட்ட (இன்சென்டிவ்) வரி சலுகைகள் தருகிறார்கள். அதனால் அவர்கள் நம்மை விட குறைவான விலையில், நிறைய வியாபாரம் செய்கின்றனர். இத்தகைய போட்டியினால் உலக சந்தையில் நமது ஏற்றுமதி வெறும் 2 சதவிகிதமே உள்ளது. கூடுதலான வரிச்சலுகை அளித்தால் ஏற்றுமதி அதிகரிக்கவும், அந்நிய செலாவணியை ஈட்டவும் உதவும்.
ஜிஎஸ்டி
இப்ப ஜிஎஸ்டியால் நிறைய தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. தவறு செய்பவர்களை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக ஜிஎஸ்டியின் விதிகள் உள்ளது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். குறிப்பாக, ஜாப் ஒர்க் செய்பவர்கள் எந்த பொருளும் வாங்குவதுமில்லை, எதையும் விற்பதுமில்லை. இந்நிலையில் அவர்களுக்கும் 18 சதவிகித வரி என்பது அவர்களால் எந்தவிதத்திலும் ஈடு செய்ய முடியாது. எனவே ஜாப் ஒர்க் செய்வோருக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். கோயம்புத்தூரின் உயிர் நாடி சிறு, குறு தொழில்களின்தான். 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான். இவர்களின் வாழ்வாதாரம் மிகப் பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, வாழ்விழந்தோர் தொழிற்கூடத்தை மீண்டும் திறக்க அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகரிக்கும் போக்குவரத்து செலவினம்
தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்களை வெளியூரிலிருந்தோ அல்லது வெளி மாநிலங்களிலிருந்தோ வாங்குகிறோம். அதனை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவு கணிசமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை மற்றும் டோல் கேட்டில் வசூலிக்கப்படும் கட்டணம் இதில் முக்கிய காரணியாகும். ஆகவே, பெட்ரோல், டீசல் விலையை குறைத்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், வாகனப் பெருக்கமும் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், அதற்கேற்ப வசூலிக்கப்படும் டோல் கட்டணம் குறையவேண்டும். ஆனால் இயல்பிற்கு மாறாக கட்டணம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு கோஇன்டியாவின் தலைவர் எஸ்.குப்புசாமி தெரிவித்தார்.
சந்திப்பு- சக்திவேல்.