ஈரோடு, மார்ச் 6-பிற மாவட்டம், பிற மாநிலங்களில் இருந்து தபால் ஓட்டு அனுப்பக்கேட்டு, ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவுக்கு இதுவரை 10 ஆயிரம் படிவங்கள் வந்துள்ளன. இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:நாடாளுமன்றத் தேர்தலில் ராணுவம், பிற மாவட்டத்தில் பணி செய்வோர், இம்மாவட்டத்தில் தேர்தல் பணி செய்வோருக்கு வழங்குவதற்காக வாக்குச்சீட்டு அச்சிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராணுவத்தில் பணி செய்வோர், அவரது மனைவிக்கும் படிவம் 2 இல் விண்ணப்பம் செய்வார்கள். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் படிவம் 12 இல் விண்ணப்பம் செய்து, வாக்குச்சீட்டை பெறுவார்கள். பிற மாவட்டம், பிற மாநிலங்களில் வசித்துக் கொண்டு தபால் வாக்கு பெற தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்து வருகின்றனர். விண்ணப்ப படிவங்களை பரிசீலனை செய்து, வாக்குச்சீட்டு, துணை படிவங்களையும் வைத்து, தபால் மூலம் அனுப்புகிறோம். ராணுவத்தில் பணி செய்வோருக்கு இணையதளத்தில் அனுப்புகிறோம். தபால் வாக்குகளை வாக்கு எண்ணிக்கை தினமான மே 23 ஆம் தேதி காலை 8 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். வெகு முன்னதாக வரப்பெறும் வாக்குகள் மாவட்ட தேர்தல் அதிகாரி முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்படும். மேலும், தேர்தல் பணிக்காக அதிகாரிகள் வாகனம் ஓட்டுதல், வாக்குப்பெட்டி எடுத்துச் செல்லுதல், கொண்டு வருவதற்காக ஜீப், வேன், லாரி ஓட்டும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மூலம் தபால் வாக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தபால் வாக்கில் அதிக எண்ணிக்கையில், ஆசிரியர்களும், காவல் துறையினரும் பதிவு செய்வார்கள். காவல்துறையினருக்கு அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது பொறுப்பு அதிகாரி மூலம் தபால் வாக்குக்கான படிவம் பெறப்படுகிறது. ஆசிரியர்களுக்கு கடந்த 24ஆம் தேதி தேர்தல் பணி பயிற்சி நடந்தபோது இதுகுறித்த விவரம் தெரிவித்து ஆவணங்களை எடுத்து வர வலியுறுத்தி உள்ளோம். வரும் ஏப்ரல் 7 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரண்டு கட்ட பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியின்போது ஆசிரியர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்குவதுடன், அங்கேயே அவர்களது ஓட்டை பதிவு செய்து பெட்டியில் செலுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு, அரசியல் கட்சி முகவர்கள் இருப்பார்கள். இரண்டாம், மூன்றாம் கட்ட பயிற்சியில் வேறு சட்டப்பேரவை தொகுதிக்கு ஆசிரியர்கள் செல்லும் நிலை ஏற்படும் என்பதால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வெளி மாவட்ட, மாநிலங்களில் பணி செய்வோரிடம் இருந்து இதுவரை தபால் ஓட்டு கேட்டு 8,000 படிவங்கள் வந்துள்ளன. காவல்துறையினர் தரப்பில் இருந்து 2,000 படிவங்கள் வந்துள்ளன. அவற்றுக்கு உடனுக்குடன் தபால் வாக்குச் சீட்டு அனுப்பப்படுகிறது. ராணுவத்தினர் 171 பேருக்கு இணையதளத்தில் அனுப்பப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி தேர்தல் சூழலுக்கு ஏற்ப தொடர்ந்து படிவங்கள் வரும். படிவங்கள் வரவர உடனடியாக அவர்களுக்கு வாக்குச்சீட்டு அனுப்பப்படும் என்றனர்.