tamilnadu

ஈரோடு மற்றும் கோவை முக்கிய செய்திகள்

ஈரோடு பூம்புகாரில் கோடை விற்பனை தொடங்கியது

ஈரோடு, மே 10-ஈரோடு பூம்புகார் மதிப்புக் கூட்டுப் பொருள்கள் விற்பனையகத்தில் கோடை விற்பனை துவங்கியுள்ளது.ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் பூம்புகார் கைவினைப் பொருட்கள், மதிப்புக் கூட்டுப் பொருள்கள் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இதில் தற்போது மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. கோடை வெயில் அதிகரித்து இருக்கும் நிலையில் தண்ணீரை குளிர வைக்க மண்ணால் செய்யப்பட்ட ஜாடி, குவளை, குடுவை, ஜக்கு போன்றவைகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும், பூம்புகாரில் மண் சிலைகள், மர சிலைகள், வெண்கல பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையிலும், பிளாஸ்டிக் பயன்படுத்தாத வகையிலும் மண்ணால் செய்யப்பட்ட பொருட்களை பலரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இங்கு மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள்45 முதல் 350 ரூபா ய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


பட்டு வளர்ப்பு துறையில் சர்வதேச விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை, மே 10-பட்டு வளர்ப்பு துறையில் சிறந்து விளங்குபவர்கள் சர்வதேச அளவிலான ‘லூயிஸ் பாஸ்டர்’ விருதுக்கு விண்ணப்பிக்க மத்திய பட்டு வளர்ச்சி வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.கடந்த 1870ஆம் ஆண்டில் பிரான்ஸ் மற்றும் அதன் அருகாமை நாடுகளில் பட்டுபுழுக்கள் பெப்ரைன் என்ற நோய் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் பல நாடுகளில் பட்டு விவசாயம் முற்றிலுமாக அழியும் தருவாய்க்கு சென்றது. இதனைத்தொடர்ந்து விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் என்பவர் பெப்ரைன் நோய் தாக்குதலுக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான மருந்தையும் கண்டுபிடித்தார்.அவரது நினைவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பட்டு வளர்ப்பில் சிறந்து விளங்கும் மூன்று பேருக்கு ‘லூயிஸ் பாஸ்டர்’ விருதினை பெங்களூரில்செயல்பட்டு வரும் சர்வதேச பட்டு வளர்ச்சி ஆணையம்வழங்கி வருகிறது. கடந்த 1974ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விருது இந்தாண்டு வழங்கப்படுகிறது. அதன்படி, வரும் நவம்பர் மாதம் 19 முதல் 22ம் தேதி வரை ஜப்பானில் நடைபெற உள்ள சர்வதேச பட்டு வளர்ச்சி ஆணைய கூட்டத்தில் வழங்கப்பட உள்ள இந்த விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டு வளர்ப்பில் சிறந்து விளங்கும் எவர் ஒருவரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும்படி மத்திய பட்டு வளர்ச்சி வாரியம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூன் 6ம் தேதிக்குள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பட்டு வளர்ச்சி மையத்தில் விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாலசுந்தரம் சாலையில் உள்ள பட்டு வளர்ச்சி மையத்தினை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.