tamilnadu

img

தேர்தல் விதியை காற்றில் பறக்கவிட்ட அதிமுக

திருப்பூர், ஏப். 9 –திருப்பூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல்பிரச்சாரத்திற்கு வந்த நிகழ்விற்கு அப்பட்டமாக அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டனர். ஆனாலும் தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியிலும், திருப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பாண்டியன் நகரிலும் செவ்வாயன்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து லாரி, திறந்தநிலை சரக்கு ஆட்டோக்கள் உள்ளிட்டவாகனங்களில் அதிமுக கொடியைக் கட்டிக் கொண்டு ஆட்களை கொண்டு வந்தனர்.தேர்தல் ஆணையம் சார்பில் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்புக்குழு, பறக்கும்படை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தேர்தல் நடத்தைவிதியை அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் முறையாக பின்பற்றுகிறார்களா, விதிமீறல் நடைபெறுகிறதா என கண்காணிப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பட்டப்பகலில் அப்பட்டமாக விதியைமீறி திறந்தநிலை சரக்கு வாகனங்களில் ஆட்களை அதிமுகவினர் அழைத்து வந்த நிகழ்வுகளைத் தடுக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ தேர்தல்ஆணையம் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.


அவிநாசியில் அத்துமீறல்


அத்துடன் அவிநாசி நகரில் இக்கூட்டத்திற்கு 100க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்தனர். எடப்பாடி பழனிச்சாமி வருகையை ஒட்டி மதியம் இரண்டு மணியிலிருந்து அவிநாசியில் போக்குவரத்தை மாற்றம் செய்து மங்கலம் சாலை வழியாக திருப்பி விட்டனர். இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள். அத்துடன் மாலை 4 மணிக்கு பள்ளிக்கூடம் முடிந்துவரும் குழந்தைகள் பேருந்துக்காக நீண்டதூரம் நடந்து சென்றுபேருந்தில் ஏறிச்சென்றனர். புதிய பேருந்து நிலையம் பகுதியில் வியாபாரம் செய்யும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கடைகளை அடைக்குமாறு ஆளும் கட்சியினர் வற்புறுத்தினர். இதனால் பல மணி நேரம் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக அவர்கள் வேதனைப்பட்டனர்.


சாலையை மறைத்து நிகழ்ச்சி


அவிநாசியில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திருமுருகன் பூண்டி சுற்றுச்சாலை வழியாக திருப்பூர் பாண்டியன் நகர் பகுதிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி பேருந்து நிறுத்தம் அருகே பிரச்சாரம் செய்தார். திருப்பூர் பி.என்.ரோடு போக்குவரத்து நெருக்கடி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். தேர்தல் பிரச்சாரத்துக்கு என குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே பிரச்சாரத்துக்காக அனுமதிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியிருந்தாலும் பூலுவபட்டி பிரிவில் இருந்து பெருமாநல்லூர் சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.இங்கும் தனியார் சரக்கு வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களில் அதிமுகவினர் ஆட்களைக் கூட்டி வந்து கூட்டம் காட்டினர். எனினும் மிகவும் அகலமான பி.என். சாலையில் போக்குவரத்தைத் தடுத்து அடைக்க வேண்டிய அளவுக்கு கட்டுப்படுத்த முடியாத கூட்டம் ஏதும்இல்லை. காவல் துறையினர் ஒழுங்குபடுத்தினால் சாலையோரமாக இந்தகூட்டத்தை கட்டுப்படுத்தி இருக்கலாம். எனினும் அதிமுகவினர் பெருந்திரளான கூட்டம் இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக சாலையை அடைத்தும், தடுப்பரண்கள் ஏற்படுத்தியும் நடு ரோட்டில் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியை அத்துமீறி நடத்தினர். ஆளும் கட்சியின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை தேர்தல் அதிகாரிகள் யாரும் கண்டுகொள் ளவில்லை. சொல்லப் போனால் ஆளும் கட்சிக்கு உடந்தையாகவே காவல் துறையினரும் செயல்பட்டனர்.மாலை நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது பெருமாநல்லூர் சாலையில் குழந்தைகளுடன் வந்தபள்ளி பேருந்துகளை காவல் துறையினர் திருப்பிவிட்டனர். திடீரென இவ்வாறு வாகனங்களை வழிமாற்றி விட்டதால், சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு வீடுகளுக்கு கொண்டு விடுவதற்கு பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் திண்டாடினர்.


மின் கம்பம் போல் கொடிக்கம்பம்


வழக்கமாக தேர்தல் பிரச்சாரத்துக்கு கொடிகள் கட்டுவதைப் போல் சமீப காலமாக இரும்பு குழாய்களில் கொடி கட்டும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். திருப்பூரில் இதுவரைஇல்லாத அளவுக்கு மின் கம்பங்கள் போல் கனமான, உயரமான இரும்புக் கம்பங்களை பாண்டியன் நகர் பகுதியில் நட்டு பெரிய கொடிகளை அதிமுகவினர் பறக்கவிட்டிருந்தனர்.முதல்வர் வருகை எனச் சொல்லி ஆளும் கட்சியைச் சேர்ந்தோர் தேர்தல் நடத்தை விதியை காற்றில் பறக்கவிட்டு அதிகார துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டதை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.அதேபோல் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி செவ்வாயன்று கோவை வருவதை ஒட்டி ஆட்களைக் கூட்டிச் செல்வதற்காக ஏராளமான தனியார் பேருந்துகள் பல்லடத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இவையும் கண்காணிக்கப்பட்டு பாஜக வேட்பாளர் தேர்தல் கணக்கில் சேர்க்கப்படுமா என்பது தெரியவில்லை. கூட்டத்தைக் காட்டுவதற்காக கோவை செல்லும் வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பயணிகளுக்கு இன்னல் ஏற்படுத்தப்பட்டது. நேர்மையான, நியாயமான தேர்தல் நடத்த முயற்சிப்பதாக தேர்தல் ஆணையம் சொல்லிக் கொண்டாலும் ஆளும் கட்சிக்கு சாதகமாக ஒரு கண்ணில் வெண்ணை, மறுகண்ணில் சுண்ணாம்பு என்ற அணுகுமுறையையே அவர்கள் கடைப்பிடிப்பதாக அரசியல் கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.