கோயம்புத்தூர், ஏப்.10- பிரதமர் நரேந்திர மோடியே சீரழிவுவாதி. அவரது கட்சிக்கு முதல் தலைமுறைவாக்காளர்கள் வாக்களிக்கக்கூடாது எனகோவையில் கே.பாலகிருஷ்ணன் கூறினார். கோவை காந்திபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்கே.பாலகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், நரேந்திர மோடி பிரதமர் என்பதை மறந்து உண்மைக்கு மாறாக அடுக்கடுக்கான பொய்களை பேசுகிறார். கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ் மொழி உலகில் சிறந்த மொழிஎன்று பேசினார் மோடி. ஆனால் பாஜகவின்தேர்தல் அறிக்கையில், சமஸ்கிருத மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி உரிமையை தட்டி பறித்து விட்டு, தமிழகத்திற்கு வந்து தமிழ் குறித்துபெருமை பேசுவது நரம்பில்லாத நாக்கு எப்படியும் பேசும் என்பதற்கு மோடியின் பேச்சே உதாரணம். பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும் எனஅனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் எழுப்பி யது. ஆனால் ஐந்து வருட ஆட்சியில் இந்தகோரிக்கையை நிறைவேற்றாத பிரதமர் மோடி, பெண்கள் உரிமை குறித்து பேச தார்மீக உரிமை இல்லை. முதல்முறையாகவாக்களிப்பவர்கள் சீரழிவுக் கொள்கைகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவேண்டு கோள் விடுத்துள்ளார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியினால் தொழில்கள் பாதிக்கப்பட்டு, குறுந்தொழில்கள் அழிய காரணம் மோடி தான். நாட்டின் சீரழிவிற்கு காரணம் நரேந்திர மோடிதான். நரேந்திர மோடி என்றால் சீரழிவுவாதி. மோடி கூறியது போல முதல் வாக்காளர்கள் சீரழிவுவாதிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்றால், பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது. சபரிமலை விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக பிரதமர் பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்க வேண்டாம் என எந்த ஒரு பிரதமரும் இப்படி கூறியதில்லை. அப்படி ஒரு பிரதமர் நமக்கு வாய்த்துள்ளார். சபரிமலை விவகாரத்தை பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் சொல்கிறது. ஆனால் அந்த உத்தரவை மீறி சபரிமலை விவகாரத்தை பேசுகிறார் என்றால், இவருக்கு எந்த உத்தரவையும் பற்றி கவலையில்லை என்கிற நிலையில் செயல்படுகிறார். இப்படி பேசிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நட வடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அப்படி ஒரு தைரியமான தேர்தல் ஆணையம் இருப்பதாக தெரியவில்லை என்றார்.
முதல் வெற்றி
மேலும், நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பது, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த முதல் வெற்றி. இடைத்தேர்தலை தள்ளி வைக்க முயன்ற அதிமுககூட்டணியின் முயற்சிக்கு பேரிடி. 22 இடைத்தேர்தல் தொகுதி களிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெரும். மே 23 வாக்கு எண்ணிக்கையின் போது மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பும் போது, 22 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று எடப்பாடி அரசு ஒழிந்தது என்ற நிலை வரும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.