india

img

சீத்தாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி காலமானார்.... ஜனாதிபதி, பிரதமர், தலைவர்கள் இரங்கல்.....

புதுதில்லி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் வியாழனன்று அதிகாலை குர்கானில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 35.அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடு முழுவதும் உள்ள அரசியல் இயக்கங்களின் ஊழியர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட எண்ணற்றோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சீத்தாராம் யெச்சூரி - இந்துராணி மஜும்தார் தம்பதியரின் மகனான ஆஷிஷ் யெச்சூரி, சென்னையில் உள்ள ஆசியன் இதழியல் கல்லூரியில் பயின்றவர். பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு வார காலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குர்கானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். 

இச்செய்தியை டுவிட்டர் மூலம் தெரிவித்தசீத்தாராம் யெச்சூரி, “எனது மூத்த மகன்ஆஷிஷ் யெச்சூரியை கொரோனா பாதிப்புக்கு இன்று காலை இழந்துவிட்டேன் என்ற தகவலை தாளமுடியாத துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள சுகாதார ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும்; இந்தக் கடினமான தருணத்தில் உடனிருந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

மருத்துவமனையிலிருந்து உடல் பெறப்பட்டு வியாழனன்று மதியமே இறுதி நிகழ்ச்சிகள் நடந்தன. இதன் பின்னர் மதியம்சீத்தாராம் யெச்சூரி வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில், “எனது மகன் ஆஷிஷ்-சுக்குநான் பிரியாவிடை கொடுத்துவிட்டேன். எங்களது துயரத்தை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த இருள்மிகுந்த தருணத்தை எதிர்கொள்ளஎங்களுக்கு பலம் அளித்த அனைவருக்கும் நன்றி கூறவிரும்புகிறேன். எண்ணற்ற உயிர்களைப் பறித்துள்ள இந்தப் பெருந்தொற்றில் எனக்கு ஏற்பட்டுள்ள துயரில் நான் தனியாகஇல்லை என்பதை உணர்வேன்” என்று கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் இரங்கல்
சீத்தாராம் யெச்சூரி மகன் மறைவுச் செய்தி அறிந்து குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆஷிஷ் யெச்சூரியின் அகால மரணம் குறித்த செய்தி அறிந்து வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு வேதனை அடைந்தேன். இந்த துயரம் தோய்ந்த தருணத்தில், திரு. சீத்தாராம் யெச்சூரி அவர்களுக்கும், அவரது குடும்பத்தார் மற்றும் உற்றாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தி உங்களுக்கு கிடைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பிரதமர் இரங்கல்
சீத்தாராம் யெச்சூரி மகன் மறைவுச் செய்தி அறிந்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், “சீத்தாராம் யெச்சூரி அவர்களது மகன் ஆஷிஷ் அகால மரணம் அடைந்தது அறிந்து துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்; அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

தோழர் சீத்தாராம் யெச்சூரி, இந்துராணி மஜும்தார் ஆகியோரின் மகன் ஆஷிஷ் யெச்சூரி ஏப்ரல் 22 காலையில் மரணமடைந்தார் என்பதை மிகவும் துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். கோவிட் தொற்று பாதிப்பால் அவர் காலமானார். அவரை இழந்து வாடும் சீத்தாராம், இந்துராணி மற்றும்ஆஷிஷ் மனைவி சுவாதி, சகோதரி அகிலா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களை யும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிபிஎம் மாநிலச் செயற்குழு இரங்கல்

கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்  சீத்தாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆசிஷ் யெச்சூரி (வயது 35)கொரானா நோயால் பாதிக்கப்பட்டு கடந்த  10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் பாதிப்புஅதிகமானதால் அவருக்கு எக்மோ சிகிச்சையும்வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஏப்ரல் 22 வியாழனன்று அதிகாலை தில்லியில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனையை தருகிறது. இவரது மறைவு தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சிறந்த பத்திரிகையாளர் என்ற வகையில் அவரது மறைவு பத்திரிகை உலகிற்கும் பேரிழப்பாகும்.ஆசிஷ் யெச்சூரியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரது மறைவால்துயருற்றிருக்கும் தோழர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழுவின் சார்பில் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ஆஷிஷ் மறைவுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்மநாபன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன்,சு.வெங்கடேசன், மூத்த தலைவர் எஸ்.ஏ.பெருமாள்,  மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், “ஆஷிஷ் யெச்சூரி மறைவுச்செய்தி அறிந்து ஆழ்ந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். இந்த கடினமான தருணத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் காலமான செய்தி அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். இந்தக் கடினமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கி.வீரமணி, தலைவர்கள் இரங்கல்
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர்சீத்தாராம் யெச்சூரியின்  மகன்  அஷிஷ் யெச்சூரி மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். கொடுந்தொற்று காலத்தில் கொள்கைப் போராட்டம் நடத்துவதில் சளைக்காது சமர்புரியும் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு, வாழ்க்கையில் இப்படி ஓர் ஏற்படக்கூடாத இழப்பு ஏற்பட்டுள்ளது நமக்கு பெரு வருத்தத்தையும், துயரத்தையும் தருகிறது. ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அக்கட்சியினருக்கும் நாம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆஷிஷ் யெச்சூரி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசிதரூர் மற்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.